70 ஆண்டுகளில் 15000 பிரசவம்: மரணமானார் கிராமத்து மருத்துவச்சி நரசம்மா

கர்நாடகாவில் 15ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பிரசவம் பார்த்து ‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற நரசம்மா (98) என்ற மூதாட்டி, வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார் .

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் 1920ஆம் ஆண்டு பிறந்தார் நரசம்மா.  இவர் பிறந்து வளர்ந்த காலங்களில் தாழ்த்தப்பட்ட சாதி எனக்கூறி தீண்டாமை கடைபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பின்னாட்களில் இவர் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பிரசவம் பார்த்த கைராசி மூதாட்டியாக இருந்துள்ளார்.

நரசம்மாவுக்கு 20 வயது இருக்கும் பொழுது தனது அத்தையின் பிரசவத்தின் போது தன் பாட்டிக்கு உதவியாக இருந்துள்ளார். அப்போது பாட்டியிடம் இருந்து பிரசவம் பார்க்கும் முறையை கற்றுக்கொண்டுள்ளார்.

அதற்கு பிறகு சுற்றுவட்டார பகுதிகளில் நரசம்மாவே பிரசவம் பார்த்துள்ளார். மருத்துவ வசதி இல்லாத கிராமங்களுக்கு நரசம்மாவே மருத்துவச்சி.

கைராசி மூதாட்டியான நரசம்மாவை அப்பகுதி மக்கள் ‘சுலாகட்டி நரசம்மா’என்றே அழைக்கின்றனர். சுலாகட்டி என்றால் ‘வீட்டில் பிரசவம் பார்க்கும் மருத்துவச்சி’ என்று பொருளாகும்.

 

பிரசவத்தை ஒரு சேவையாக செய்து வந்த நரசம்மா தனது வாழ்நாளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பிரசவம் பார்த்துள்ளார். இவரது சேவையை பாராட்டி கடந்த 2012ஆம் ஆண்டு ‘இந்தியாவின் சிறந்த குடிமகள்’ விருது வழங்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் ‘பத்மஸ்ரீ’ விருதையும் பெற்றார் நரசம்மா. நரசம்மாவுக்கு தும்குர் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டமும் வழங்கியுள்ளது.

 

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக நரசம்மா நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், மருத்துவத்துறையினர், அப்பகுதி மக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *