கூட்டமைப்பு எம்.பிக்கள் மூவரின் தலையைக் குறிவைக்கிறது மஹிந்த அணி! – எம்.பி. பதவியை பறிக்க வியூகம்

இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை, தகுதியிழப்புச் செய்யக் கோரி, சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எச்சரித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மஹிந்தவின் சகாவான ரோஹித அபேகுணவர்தன எம்.பி. மேற்படி எச்சரிக்கையை விடுத்தார்.

“இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.

ஆனால் அதனை இரகசியமாக வைத்திருக்கிறோம். புத்தாண்டில் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.

2015 ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட போது, கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்தனர் என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன.

ஆனால் அவர்களின் பெயர்களை இப்போது ஊடகங்களுக்கு வெளியிட முடியாது. நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் போதே அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும்.

இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்ததால் கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.

அதே சட்டம் இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *