தீர்வுக்கு இதுவே உகந்த காலம்! – யாழ். ஆயர் காத்திரமிக்க நத்தார் செய்தி

  • ‘ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி’ சாதுரியமாக முறியடிப்பு; ஜனநாயகத்துக்குப் பெரு வெற்றி. 
  • தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பணயம் வைத்து அரசியல் செய்யாதீர்கள்.
  • புதிய அரசமைப்பு உருவாகுவதற்கு அனைவரும் கண்டிப்பாகப் பயணியாற்ற வேண்டும்.

‘‘தமிழ் மக்களையும் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் பணயம் வைத்து அரசியல் நடத்தாதீர்கள் எனத் தமிழ் அரசியல்வாதிகளிடமும் தமிழ் அரசியல் கட்சிகளிடமும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் பெயரால் அன்பு வேண்டுகோள் ஒன்றை விடுக்க விரும்புகின்றோம். தயவு செய்து தமிழ் மக்கள் நலனுக்காக உங்கள் அரசியல் இலாபங்கள் அனைத்தையும் தியாகம் செய்யுங்கள்!’’

– இவ்வாறு தனது கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார் யாழ். ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை.

தமிழ் மக்களின் நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தக் காலத்கைவிட மிகச் சிறந்த காலம் தோன்றப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது நத்தார் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-

“2018ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழா உலகம் முழுவதிலும் இன, மத, நிற, மொழி வேறு பாடின்றி கொண்டாடப்படும் வேளை பாலக இயேசுவின் அன்பும் அருளும் ஆசீரும் இவ்விழாவைக் கொண்டாடும் அனைவரோடும் என்றும் இருப்பதாக என இறை ஆசீர்மிக்க வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்.

இந்தப் பெருவிழாவின் போது உலகம் முழுவதிலும் பல்வேறு மொழிகளிலும் பாடப்படும் ஒரே இறைவார்த்தை ‘உன்னதத்தில் கடவளுக்கு மாட்சி உரித்தாகுக. உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!’ என்பதாகும் (லூக்காஸ் 2:1314)

இந்தப் பெருவிழாக் காலத்தில் அவருக்கு உகந்தவர்களாகி எல்லோருக்கும் அமைதி உண்டாக்கும் கருவிகளாகவே நாம் அழைக்கப்படுகின்றோம்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி முதல் இலங்கை நாட்டை அச்சுறுத்திய ‘ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி’ என அழைக்கப்படும் அரசியல் முறுகல் நிலை ஓரளவு சுமுகமாக தீர்ந்துள்ளமை மனதிற்கு நிம்மதி தருகின்றது. ஜனநாயகம் வென்றுள்ளது என வரவேற்போம்.

இது ஒரு தேசியப் பிரச்சினை என்கின்ற வகையில் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையும் யாழ். மறைமாவட்ட ஆயர் என்கின்ற வகையில் நாமும் இப்பிரச் சினை சுமுகமாக தீர்க்கப்பட வேண்டுமென இறைவரம் வேண்டுமாறு இறைமக்களிடம் வேண்டுகோள் விடுத்தோம். யாழ் மறைமாவட்டத்தின் பல பங்குகளில் வேண்டுதல் செய்தனர்.

எதிர்பாத்துப் பயந்த பயங்கர முடிவுகளும் இன்றிப் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. இறைவனுக்கு நன்றி. இறைவரம் வேண்டிய அனைவருக்கும் அன்பான நன்றிகள்.

தேசிய ஜனநாயக முன்னணி உதயமாகி நிறைவேற்று அதிகாரத்துக்கு முடிவுகட்டவுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது வரவேற்கப்படவேண்டியதே. இலங்கை நாட்டின் எல்லா பிரஜைகளுக்கும் நீதியான, சமத்துவமான, அமைதியான வாழ்வு கிடைக்க அனைத்து அரசியல்வாதிகளும் உழைக்க வேண்டும். தனிப்பட்ட அதிகாரம், பதவி, பட்டம் என்பன எல்லாம் இங்கு முக்கியமல்ல.

ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி இது ஓர் முடிவல்ல. மாறாக இது ஒரு ஆரம்பமே. எதிர்பார்த்து நம்பி இருந்த அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாமலே போய்விட்டது. நல்லெண்ண அரசு நீதியாகச் செயற்படும் என நம்பி ஏமாந்து விட்டோம்.

ஆனால், தமிழ் அரசியல் கட்சிகள் பணத்திற்காகவும் பதவிக்காகவும் விலை போகாத வகையில் நாம் இன்று முன்பை விட இன்னும் அரசியல் பலம் மிக்கவர்களாகவே உள்ளோம்.

தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சினைக்குத் தீர்வு காண இக்காலத்கைவிட மிக சிறந்த காலம் தோன்றப் போவதில்லை. இந்தநிலை தமிழ் மக்கள் இலங்கையின் பல பகுதிகளில் போர்க் காலத்தில் அனுபவித்த கோர அனுபவங்கள் வழியாகவே வந்தது என்பது உண்மை.

தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் பெயரால் அன்பு வேண்டுகோள் ஒன்றை விடுக்க விரும்புகின்றோம். தயவு செய்து தமிழ் மக்களையும் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் பணயம் வைத்து அரசியல் நடத்தாதீர்கள். தமிழ் மக்கள் நலனுக்காக உங்கள் அரசியல் இலாபங்கள் அனைத்தையும் தியாகம் செய்யுங்கள்.

இப்போது அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்டு எட்டப்படாத எந்த முடிவும் வருங்காலத்தில் எட்டப்படும் என்ற எந்த உத்திரவாதமும் இல்லை. தமிழ் மக்களுக்கு எதிரான அல்லது சாதகமற்ற உங்கள் எந்த நிலைப்பாட்டையும் இனியும் தமிழ் மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என உறுதியாகச் சொல்லி வைக்க விரும்புகின்றோம்.

இலங்கை நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்கள் வாழ் கின்றன என்பதை உறுதிப்படுத்தி அவர்களிள் சம உரிமையோடு வாழக்கூடிய கூடிய சுதந்திர வாழ்விற்கான நீதியோடு கூடிய நிரந்தர தீர்வைக் கொண்டு வரக்கூடிய மாற்றப்பட முடியாத புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கான செயற்பாட்டுக்காக அரசியல்வாதிகள் மட்டுமல்லர் சம்பந்தப்பட்ட அனைவரும் கண்டிப்பாக பயணியாற்ற வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம்.

உலகில் அவருக்கு உகந் தோருக்கு அமைதி உண்டாகுக என்ற வார்த்தைகளை எமதாக்கி வாழ அழைப்பு விடுத்து இறை யாசீருடன் கிறிஸ்மஸ், 2019 புது வருட வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *