இழப்பீட்டுக்கு நிதியை உடன் வழங்குமாறு ரணில் உத்தரவு!

இடர்முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்று பார்வையிட்டதுடன், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்கள் மற்றும் அதிகாரிகளை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்றும், வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு அவற்றை புனமைப்பதற்கு தேவையான நிதி வழங்கப்படும் என்றும் கூறினார்.

அத்துடன், வெள்ள நிவாரணப்பணிகளுக்காக, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட செயலகங்களால் கோரப்பட்ட நிதி முழுமையாக விடுவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இரண்டு நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களையும் பார்வையிட்ட அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிப் பொருட்களையும் வழங்கினார்.

இந்தப் பயணத்தை அடுத்து, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார பாதிப்புகள் தொடர்பான அறிக்கை ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளார்.

இதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கத் தேவையான நிதியை உடனடியாக வழங்குமாறு நிதி அமைச்சுக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார் என்று பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை வழங்கும் பணிகளையும் உடனடியாக ஆரம்பிக்குமாறும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *