விளக்கமில்லையேல் வகுப்பெடுக்க தயார் – தொண்டா அணியின் சவாலுக்கு திகாவின் சகா சாட்டையடி!

கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுதல் என்பது தொழிலாளர் தேசிய சங்கத்தின் நீண்ட கால கோரிக்கையாகும்  என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஶ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

திகாவிடம் விளக்கம்கோரி இ.தொ.காவின் உபதலைவரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு பதிலடி கொடுத்து சிறிதரனால்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்படுவதாவது,

எமது தலைவர் திகாம்பரம் 2007 ஆம் ஆண்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்றவுடனேயே கூட்டுஒப்பந்தத்தில் பங்குதாரராக இருந்த எமது சங்கம் வெளியேறிவிட்டது.

எமக்கு கூட்டு ஒப்பந்தம் தொடர்பான தூரநோக்கம் இருந்தது. எனவேதான் இன்று சாத்தியமில்லா அந்த கூட்டு ஒப்பந்த முறையில் இருந்து வெளியே வாருங்கள் என ஏனைய அமைப்புகளையும் அழைக்கின்றோம்.

அதில் விளக்கம் இல்லாதவர்கள் எங்களிடம் வந்தால் அவர்களுக்கு வகுப்பைடுக்க நாங்கள் தயாராகவே உள்ளோம் .

கூட்டு ஒப்பந்த முறைமையில் ஊழியர்களின் சம்பளம் தீர்மானிக்கப்படுவது உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் உள்ள நடைமுறை என்பதை நாம் அறிவோம்.

ஆனால், இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் முதலாளிமார் சம்மேளனத்தின் தேவைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒன்றாகவுள்ளது.

1992 ஆம் ஆண்டு தோட்டங்களை தனியார் மயப்படுத்தியதன் பின்னர் 1998 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள இந்த கூட்டு ஒப்பந்த முறையில் 2007 ஆம் ஆண்டு வரை தொழிலாளர் தேசிய சங்கமும் கூட்டு கமிட்டி ஊடாக அங்கத்துவம் வகித்தது.

எனினும், 2007 ஆம் ஆண்டு தலைமைப் பதவியை பொறுப்பேற்றதும் தொழிலாளர் தேசிய சங்கத்தினை அதில் இருந்து விலக்கிக் கொண்ட தூர நோக்கு தலைவன் திகாம்பரம்.

எனவே இற்றைக்கு 12 வருடத்திற்கு முன்னதாகவே அந்த தீர்மானத்தை எடுத்த அவருக்கு ஏனைய தரப்பினரையும் அழைக்கும் தார்மீகம் உண்டு.

ஆனால், 2010 வரை கூட்டு ஒப்பந்தம் அடிமை சாசனம் என அறிக்கைவிட்டுக் கொண்டிருந்த கணபதி கனகராஜ் இன்று கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகவேண்டும் என வினா எழுப்புவதும் விளக்கம் கேட்பதும் வேடிக்கையானது.

சந்திரசேகரன் தலைமையில் மலையக மக்கள் முன்னணியில் தேசிய பட்டியல் பாராளுமன்றம் சென்றபோதும் சதாசிவம் தலைமையில் தொழிலாளர் ஐக்கிய முன்னணியில் மத்திய மாகாண சபை உறுப்பினரானபோதும்

அவருக்கு இருந்த அறிவும் ஞானமும் அவர் சொன்னதுபோலவே தஞ்சாவூர் இறக்குமதிகளிடம் தஞ்சமானதும் மங்கிவட்டது போலும். அதனால்தான் ஆறுமுகனின் பினாமி போன்று உளறுகிறார்.

ஒக்டோபர் மாதம் 30 ம் திகதி 1000/- அடிப்படை சம்பளம் வாங்கிக்கொடுக்காவிட்டால் பாராளுமன்ற பதவியை விட்டு விலகுவேன் என்று சொன்ன அவரின் தலைவர் அரசியல் சூழச்சியினால் அமைச்சுப் பதவி கிடைத்தவுடன் அதனை மறந்துவிட்டார்.

எனவே ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுக்காமல் இன்னும் பாராளுமன்ற பதவியை வகிப்பது ஏன் என ஆறுமுகனிடம் விளக்கம் கேட்டு சொல்வதே கனகராஜின் வேலையாக உள்ளதே தவிர,

கடந்த பத்தாண்டு காலமாக கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக குரல் கொடுத்து வரும் எமது தலைவரிடம் விளக்கம் கேட்பது அல்ல. அப்படியே அவருக்கு விளக்கம் தேவையெனில் நேரில் வந்தால் வகுப்பு எடுத்து அனுப்பவும் நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *