இந்தோனேஷியாவில் மீட்பு பணிகள் தீவிரம் ! சுனாமி பலி 373 ஆக அதிகரிப்பு

இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேஷியாவின் சுமத்ரா, ஜாவா தீவுகளுக்கு இடைப்பட்ட சுந்தா ஜலசந்தியில் அமைந்துள்ள அனாக் கிரகட்டாவ் எரிமலை கடந்த சனிக்கிழமை இரவு வெடித்து சிதறியது.

இதனால் கடலில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுனாமி ஏற்பட்டு, சுமத்ரா, ஜாவா தீவுகளின் கடற்கரையை ஒட்டிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

ஜாவா தீவின் பிரபல சுற்றுலா தலமான கேரிடா கடற்கரையை ஒட்டிய வீடுகள் அலையில் அடித்துச் செல்லப்பட்டு தரைமட்டமாகின. மீட்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

சுனாமியில் சிக்கி 222 பேர் பலியானதாக நேற்று முன்தினம் கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பேரிடர் மீட்பு மைய செய்தித் தொடர்பாளர் சுடோபோ பர்வோ  நேற்று அளித்த பேட்டியில்,

‘‘பலி எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது. 1459 பேர் காயமடைந்துள்ளனர். 128 பேரை காணவில்லை. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது’’ என்றார்.

சுனாமி அலைகள் தாக்கியதால் சுந்தா ஜலசந்தியை சுற்றிய பகுதிகள் முழுவதும் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவமும், போலீசாரும், தன்னார்வ தொண்டு அமைப்பினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  நேற்று பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியதால் மீட்பு பணியில் சிரமமும் ஏற்பட்டது.

இதற்கிடையே, கிரகட்டாவ் எரிமலை இன்னும் சீற்றத்துடனே காணப்படுகிறது. இதனால், ஆழ்கடலில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, மீண்டும் சுனாமி ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்படாமல், எரிமலை வெடிப்பதால் சுனாமி பேரலை ஏற்படுவது அபூர்வமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *