‘அந்த 51 நாட்கள்’ – மைத்திரி, ராஜித வரிசையில் ஹக்கிமும் புத்தகம் எழுத தயார்!

அரசியலிருந்து ஓய்வுபெற்ற பின்னர்தான் ‘அந்த 51 நாட்கள்’ என்ற புத்தகத்தை எழுதுவேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இலங்கையில் கடந்த 51 நாட்களாக நிலவிய அரசியல் குழப்பங்கள் தொடர்பில் நானும் ஒரு புத்தகம் எழுதவேண்டும். அந்தப் புத்தகத்தை இப்பொழுதே எழுதினால் அது இன்னும் பல சர்ச்சைகளை உருவாக்கிவிடும். ஆகவே, நான் அரசியலிருந்து ஓய்வுபெற்ற பின்னர்தான் ‘புத்தகத்தை எழுதுவேன் என்றும் அவர் கூறினார்.
உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்பாட்டில், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட நவீன தெருமின்விளக்குகளை நேற்றிரவு (24) திறந்துவைத்த
பின்னர் கல்முனையில் நடைபெற்ற ‘எழுச்சியால் எழுவோம்’ பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கட்சியிலுள்ள சிலர் அசாதரண கருத்துகளை தெரிவித்து, தனியான பாதை அமைத்துச் செல்வதற்காக கட்சியையும், அதன் தலைமையையும் குறை கூறிக்கொண்டிருப்பார்கள்.
பதவி, அமைச்சு காரணமாக அவர்களுக்கு வருகின்ற ஆசையின் பின்விளைவுதான் இது. தங்களது அரசியல் பிழைப்புக்காக செய்கின்ற இவற்றுக்கு சமூகம் சார்ந்த முலாம் பூசுவார்கள்.
இப்படியான அரசியல் அன்று தொடக்கம் இன்றுவரை நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இப்படியான சூழலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சோரம்போவது என்பது சர்வசாதரண விடயமாக மாறிவிட்டது. இதனால்தான் கட்சியின் போராளிகள் அஞ்சினார்கள். இந்தமுறை நாட்டிலுள்ள முழு முஸ்லிம்களும் அஞ்சினார்கள்.
இந்த அரசியல் கொந்தளிப்பின்போது முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கின்ற முடிவு குறித்து முழு முஸ்லிம் சமூகமும் மிகுந்த அவதானத்துடன் இருந்தது.
முஸ்லிம் காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் ஒருமித்து பயணிக்கின்ற விடயத்தில் சிவில் சமூக அமைப்புகள் காத்திரமான பங்களிப்புகளை வழங்கின. எங்களுடன் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் ஜனாதிபதியின் பிழையான தீர்மானங்களுக்கு எதிராக போராடி வெற்றிகண்டன.
நாட்டின் ஜனநாயகம் பாதுகாப்பட்டது. சட்டத்தின் ஆட்சி என்பது தலைநிமிர்ந்து நிற்கின்ற ஒரு நிலை உருவாக்கப்பட்டது.
எங்களுடன் சேர்ந்து மக்கள் காங்கிரஸ் இணைந்து பயணிப்பதை புத்திஜீவிகள் வரவேற்றுள்ளனர். ஆனால், கட்சிக்குள் இந்த இணைப்பு தொடர்பில் நிறைய மாற்றுக்கருத்துகள் இருந்துகொண்டிருக்கின்றன.
எதிர்முகாமாக இருந்தவர்களுடன் கூட்டுவைப்பது என்பது இலகுவான விடயமல்ல. இதற்கு தனிப்பட்ட சிலரின் அரசியல் அபிலாஷைகள் கலந்திருக்கின்றன. இவற்றை முகாமை செய்வது தலைவர்கள் மத்தியிலுள்ள சவாலாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மும்மூர்த்திகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அவர்களுடன் ஆட்சியின் இணைத்துக்கொள்வதற்கு பசப்பு வார்த்தைகளைப் பேசினார்கள்.
நாங்கள் அவர்களுடன் சமூகம் சார்ந்து பேசும்போது அங்கிருந்து அகங்காரம்தான் வெளிப்பட்டது. நாங்கள் மக்காவுக்கு சென்றிருந்தபோது, அங்கேயும் அவர்களது தூதுவர்கள் வந்து பேசினார்கள்.
நானும் றிஷாத் பதியுதீனும் எங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தோம். எங்களது முடிவு தங்களுக்கு சாதகமில்லை என்பது தெரிந்தவுடனேயே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அறிவித்தலை விடுத்தார்.
ஜனாதிபதி தனது தவறை மறைப்பதற்காக அரசியலமைப்பை மீறி தவறுக்கு மேல் தவது செய்துகொண்டிருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷ என்பவர் மக்கள் பிரமிப்புடன் பார்கக்கூடிய மிகப்பெரிய அரசியல் ஆளுமை. பாராளுமன்றத்தில் அவருக்கு பெரும்பான்மை இல்லாவிடினும் அதனை எப்படியாவது எடுத்துவிடுவார் என்ற அதீத நம்பிக்கையில் மக்கள் இருந்தனர்.
அவரது ஆட்சி பெரும்பான்மையானோருக்கு விருப்பமில்லாவிட்டாலம் அவரை அசைக்கமுடியாது என்று அச்சப்பட்டார்கள்.
ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமித்தபின்னர், எந்த அமைச்சுப் பொறுப்புகளையும் எடுக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்று பலமான ஒரு அணியாக இருப்போமா என்பது குறித்தும் நாங்கள் சிந்தித்தோம்.
ஆனால், கட்சியிலுள்ளனர்கள் அதற்கும் உடன்படவில்லை. இந்த ஆட்சி இன்னும் 9 மாதங்களுக்கு மாத்திரமே இருக்கும். அதற்கு பெரிதாக எதனையும் சாதித்துவிட முடியாது.
நாங்கள் அமைச்சு பொறுப்புகளை ஏற்காதிருந்தால் இருக்கின்ற 30 அமைச்சர்களும் எங்களுக்கு வேலை செய்திருப்பார்கள். நாங்கள் வெறும் பாராளுமன்ற உறுப்பினர்களாக மாத்திரம் இருந்தால் இருப்பதையும் இழுந்துவிடுவோமா என்றும் பேசப்பட்டது.
ஆனால், நாங்கள் அமைச்சுகளை ஏற்காதிருப்பதை ஐக்கிய தேசியக் கட்சியும் விரும்பாது. ஏனென்றால், அவர்கள் எங்களை தலையின்மேல் வைத்து கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயவில் தற்போது ஆட்சி நடைபெறுவதால், தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத மஹிந்த ராஜபக்ஷ அணியினர் தெற்கிலுள்ள கிரமாப்புர அப்பாவி சிங்கள மக்களிடம் இனவாத கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
இப்படிச் செய்தாவது ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற நப்பாசையில் இப்படி செய்துகொண்டிருக்கின்றனர்.
நாங்கள் கொண்டுவந்த ஜனாதிபதி யதார்த்தை புரிந்துகொண்டு, எதை இல்லாதொழிக்க வேண்டும் என்று மக்கள் ஆணை வழங்கினார்களோ அதை மதித்து எங்களுடன் இணைந்து செயற்படுவார் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு இருக்கிறது.
தற்போது தற்காலிக கணக்கறிக்கைதான் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜனவரி கடைசியில் அல்லது பெப்ரவரி முதல் பகுதியில் 2019 வரவு, செலவுத்திட்டம் கொண்டுவரப்படும். இது இலகுவானதொரு விடயமல்ல. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில்
பெற்றுக்கொண்ட கடன்கள் எல்லாவற்றையும் கட்டவேண்டிய கடைசி ஆண்டு இதுவாகும். இவை எல்லாவற்றையும் கொடுத்துகொண்டு தேர்தலுடன் கூடிய வரவு, செலவுத்திட்டத்தை தயாரிக்கவேண்டும்.
ஜனநாயக தேசிய முன்னணி என்ற புதியதொரு அரசியல் இயக்கமான்றை நாங்கள் அடுத்தவாரம் தேர்தல் ஆணையாளரிடம் பதிவுசெய்யவுள்ளோம்.
இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியமானதொரு பங்காளியாக இணைந்து, தேசிய மட்டத்திலான தேர்தலை வெல்லக்கூடிய திட்டமிடலை செய்துகொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டணி எந்த தேர்தலுக்கு சென்றாலும் தலைமை வேட்பாளர் யார் என்ற தெளிவான தீர்மானம் இருக்கவேண்டும்.
பொதுத் தேர்தலொன்று வந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனியாகத்தான் போட்டியிடும். ஜனாதிபதி தேர்தல் வருகின்றபோது அவர்கள் எடுக்கின்ற தீர்மானம் முக்கியமான தாக்கம் செலுத்தும். தேர்தல் முறை தொடர்பில் நாங்கள் எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு பரவலாக எல்லாக் கட்சிகளும் வந்துள்ளன.
அடுத்த வருடத்துக்குள் மக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிட முடியாது. அதற்கான உத்தரவாதத்தை நான் தருவது அசாத்தியமானது.
ஆனால், அடுத்துவரும் ஆட்சியை தீர்மானிக்கும் விடயத்தில் நாங்கள் வீரியமாக இருக்கவேண்டுமாக இருந்தால், இதே உற்சாகம் கடைசிவரை இருக்கவேண்டும்.
அடுத்த தேர்தலுக்கிடையில் காணிப்பிரச்சினைகள் தொடக்கம் பல பிரச்சினைகளுக்கான தீர்வு என்னவென்பதுதான் ஆட்சியில் பலமான இடத்திலுள்ள எங்களுக்கு இருக்கின்ற மிகப்பெரிய சவால்.
கல்முனை விவகாரத்தில் எல்லை தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியிலும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. இரு பக்கமுள்ள இந்தச் சிக்கலை பிரதமர் உரிய முறையில் தீர்க்கவேண்டும்.
அரசியல் பிரச்சினைகாக ஒற்றுமைப்பட்டதுபோல, எமது பிரச்சினைகளை தீர்க்கின்ற விடயத்திலும் இதைவிட நெருக்கமான ஒற்றுமை தேவை. தீர்வு விடயத்தில் அரசாங்கத்துடன் பேசுவது மட்டுமின்றி, எதிர்த் தரப்புடனும் பேசவேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இதைவிட நெருக்கமாக எந்தக் காலத்திலும் நாங்கள் செயற்பட்டதில்லை.” என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *