தனித்துவத்தை இழந்துவிட்டன முஸ்லிம் அரசியல் தலைமைகள்! – இப்படிக் கூறுகின்றார் பஷீர்

“அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டதன் மூலம் அரசியலில் பேரம் பேசும் சக்தியையும் தனித்துவத்தையும், முஸ்லிம் அரசியல் தலைமைகள் இழந்து விட்டன.”

– இவ்வாறு ஐக்கிய சமதானக் கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடு, காத்தான்குடி, ஹோட்டல் பீச்வே மண்டபத்தில் நேற்று நடைபெற்றபோது, அங்கு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதில் தொடர்ந்து உரையாற்றிய பசீர்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சியில் இருப்பது போல, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் தற்போது எதிர்க்கட்சியில் இருந்திருந்தால், சரியாக, சமத்துவமாக தமிழ் அரசியல் சக்திகளோடு, தமிழ்ப் பிரதிநிதிகளோடு இருந்து பேசுகின்ற சக்தி, முஸ்லிம்களுக்குக் கிடைத்திருக்கும்.

எனினும், அமைச்சுப் பதவிகளை எடுத்தவுடனே அந்தச் சக்தி இல்லாமாலாகிவிட்டது. இன்னுமொரு பகுதியைக் கூடக் கூட எடுப்பதற்கு இன்னுமொரு போராட்டமும் செய்கின்றார்கள்.

இந்த அமைச்சுப் பதவிகளால் முஸ்லிம் சமூகத்துக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப், இனப் பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களுக்கு சமத்துமவான பங்கு வேண்டுமெனக் கூறினார்.

தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. அந்த நீதி இன்னுமொரு சமூகத்தை சுட்டுவிடக் கூடாது. அதற்காக சரியான உரையாடல்கள், பேரம் பேசுதல்களை முஸ்லிம் சக்திகள் செய்ய வேண்டும்.

எனவே, தனித்துவமான தலைவர் அஷ்ரப்பின் கொள்கையை மீண்டும் நிலை நிறுத்துகின்ற கட்சியாகத்தான், இந்த ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். எங்களுக்குப் பதவி தேவையில்லை.

எனக்கும் ஹஸன் அலிக்கும் இருக்கின்ற ஒரேயொரு கடமை, இவ்வளவு அனுபவங்களையும் சுமந்து வந்து சரியான பாதைக்கு முஸ்லிம் அரசியலை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பதேயாகும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *