நல்லிணக்கத்துக்கு நல்லதோர் அடித்தளம்!

“வடக்கு மாகாணத்தைத் திடீரென தாக்கியிருக்கின்றது பேய் மழை, பெரு வெள்ளம் என்ற பேரிடர். இந்தச் சந்தர்ப்பத்தில் நமது தமிழ் மக்களுக்கு விரைந்து உதவுவதற்கு முன்வந்ததன் மூலம் நட்புரிமைக்கும் கை நீட்டியிருக்கின்றது இலங்கைப் படைத்தரப்பு. இது நல்லதோர் ஆரம்பமாக அமையுமாக இருந்தால், அது புரிந்துணர்வுக்கும், நல்லிணக்கத்துக்கும் நல்ல அடித்தளமாகும்.”

– இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘காலைக்கதிர்’ பத்திரிகையின் இன்றைய (24.12.2018) ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இழப்புகளும், இடர்களும் இனம் பார்த்தும் வருபவையல்ல; இடம் பார்த்தும் நடப்பவையல்ல.

அப்படித்தான் நமது வடக்கு மாகாணத்தைத் திடீரென தாக்கியிருக்கின்றது பேய் மழை, பெரு வெள்ளம் என்ற பேரிடர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலில் அவசரமாகத் தேவைப்பட்டவை உடனடி மீட்புப் பணிகளும் முதலுதவியும். அடுத்து அவசர நிவாரண நடவடிக்கைகள்.

அவசர மீட்புப் பணிகளிலும் முதலுதவிச் செயற்பாடுகளிலும், முதற்கட்ட – உடனடி நிவாரண வேலைகளிலும் இராணுவத்தினரும் கடற்படையினரும் ஆற்றிய பங்களிப்பு விதந்துரைக்கத்தக்கதாக அமைந்திருந்ததைச் சிலாகித்துக் குறிப்பிட்டேயாக வேண்டும்.

இனவாதத்தால் துருவமயப்பட்டு இங்கு தமிழர் தேசமும் சிங்களவர் தேசமும் பிரிந்து கிடக்கின்றன. இலங்கைச் சிறு தீவின் அரசாட்சி – அதிகாரம் பெரும்பான்மையினரிடம் சிக்கிக் கிடக்க, அந்த அதிகாரத்தைக் கையாளும் பேரினவாதிகள் அதனைப் பிரயோகிப்பதற்கான பிரதான கருவியாக முப்படையினரையும், பொலிஸ் துறையையுமே கடந்த ஏழு தசாப்தங்களாகப் பயன்படுத்தி வருகின்றார்கள்.

சிங்கள, பெளத்த பேரினவாதத்தால் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வருகின்றோம் என்ற துயரத்தில் மூழ்கிக் கிடக்கும் தமிழர் தேசம், அந்த அடக்குமுறையின் – கொடுங்கோல் மேலாதிக்கத்தின் பிரயோகக் கருவியாகவே சிங்களப் படைகளைப் பார்த்து நிற்கின்றார்கள்.

தங்களது தாயகத்தை ஆக்கிரமிக்க வந்து நிற்கும் அந்தியப் படைகளாவே இலங்கை இராணுவத்தை வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் தொடர்ந்து கருதும் மனநிலையே இங்கு இன்றும் – இன்னும் நீடிக்கின்றது.

ஈழத் தமிழர்களின் கடந்த கால அனுபவம் – பட்டறிவு – அந்த அசைக்க முடியாத மனநிலையைத்தான் எம்மத்தியில் ஆழமாக வேரூன்றி விதைத்துக் கடந்து சென்றிருக்கின்றது.

அதனால்தான் எமது சமூக வாழ்வியக்கத்தில் இலங்கைப் படைகள் தொடர்புபடும்போது அதை ஏற்க மறுத்து, சமூகத் துரோகிகளாக – தீண்டத்தகாத சக்திகளாகப் படைத்தரப்பினரை நாம் பார்க்கும் நிலைமை தொடருகின்றது.

நமது அரசியல், சமூகத் தலைவர்கள் மட்டுமல்லர், தமிழர் தேசத்தின் பெரும்பாலும் ஒவ்வொரு குடிமகனினதும் எண்ணமும் மன ஓட்டமும்கூட இத்தகையதுதான்.

பதின்மூன்றாவது அரசமைப்புத் திருத்தத்தின் கீழ் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்று கூறப்பட்டாலும் நடைமுறையில் அது சாத்தியமாகவேயில்லை.

பொலிஸ் துறையும் தென்னிலங்கையில் அதிகாரத்தில் – ஆட்சியில் இருக்கும் சிங்களத் தரப்புகளிடையே சிக்குண்டிருப்பதால் பொலிஸையும் தமிழர்களின் காவலர்களாக ஏற்கத் தமிழர்கள் தயாராக இல்லை. அதுவும்கூட அந்நியப் பொலிஸாகவே பார்க்கப்படுகின்றது.

இதனால்தான், இலங்கைப் படைகளுடனும் பொலிஸுடனும் வடக்கு, கிழக்குத் தமிழர்கள் ஒட்டுறவு காட்டாமல் ஒதுங்கியே இருந்து வருகின்றார்கள்.

இலங்கைத் தீவின் அரசமைப்பு அதிகார வலிமை, தமிழர் தேசத்தை ஆக்கிரத்து நிலைகொள்வதற்கான பலத்தை அப்படைகளுக்குத் தந்திருக்கின்றது.

அதை எதிர்க்கும் வலிமை எம்மிடம் இல்லை என்ற இயலாமை நிலை கருதி அதனைப் பொறுத்து – சகித்துப் போகும் கட்டாயத்தில் தமிழர் தேசம் இருக்கின்றது. அப்படித்தான் நாம் கருதிக் கொண்டிருக்கின்றோம்.

இங்கு, இராணுவம் உட்பட முப்படைகளும் பொலிஸாரும் முன்னெடுக்கும் பொது மற்றும் சமூக நிகழ்வுகளில் நமது மக்கள் பங்காளர்களாவதில்லை. அவற்றைத் தீண்டத் தகாத நிகழ்ச்சிகளாக அவர்கள் ஒதுக்கி விடுவர்.

இந்தப் பின்புலத்தில்தான் வெள்ளப் பேரிடர் நமது வன்னி மண்ணை இலக்கு வைத்துத் தாக்கியிருக்கின்றது. ஆனால், பேரிடர் நிலைமை கட்டுமீறிய ஓரிரு மணித்தியாலயத்துக்குள்ளேயே வன்னிப் பிரதேசத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரும், கடற்படையினரும் விரைந்து களத்தில் இறங்கி துரிதமாகவும் மிகச் சிறப்பாகவும் அவசர மீட்புப் பணிகளை முன்னெடுத்திருக்கின்றார்கள் என்ற செய்தி பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வந்து கொண்டிருக்கின்றது.

மனித நேயம் கொப்பளிக்கும் இத்தகைய நிகழ்வு இது முதல் தடவையல்ல.

கொடூரப் போரில் – பேரழிவு யுத்தத்தில் – நாசகார சண்டையில் மும்முரமாக மோதிக் கொண்டிருந்த இலங்கைப் படைகளும் விடுதலைப் புலிகளும் ‘சுனாமிப் பேரலை’ என்ற பேரிடர் நமது இலங்கைத் தீவையும் இலக்கு வைத்துப் பல்லாயிரம் உயிர்களைக் காவு கொண்டபோது தமது போரியல் முரண்பாட்டைத் தூக்கிக் கடாசி விட்டு, ஒரு கணத்துள் ஒன்றிணைந்து செயற்பட முன்வந்து சாதித்தும் காட்டினார்கள்.

பக்கத்துப் பக்கத்தில் நின்று பரஸ்பரம் உதவினார்கள். தென்னிலங்கையிலிருந்து நிவாரணப் பணியாளர்கள் வடக்கு, கிழக்குக்கு விரைந்தனர். வடக்கிலிருந்து நிவாரணப் பொருட்களுடன் விடுதலைப்புலிகளே தென்னிலங்கைக்கு நேரடியாகச் சென்றார்கள்.

இழப்பும், துயரமும், பிரிந்தவர்களை – தூரத்தே விட்டு நிற்பவர்களை ஒன்றிணைய வைக்கும்; பாதிப்பும், துன்பமும் முரண்பாடுகளை மேவி நட்புரிமையையும் புரிந்துணர்வையும் இறுக்கமாக்கும்.

சரியான சமய சந்தர்ப்பத்தில் நமது தமிழ் மக்களுக்கு விரைந்து உதவுவதற்கு முன்வந்ததன் மூலம் நட்புரிமைக்கும் கை நீட்டியிருக்கின்றது இலங்கைப் படைத்தரப்பு.

இது நல்லதோர் ஆரம்பமாக அமையுமாக இருந்தால், அது புரிந்துணர்வுக்கும், நல்லிணக்கத்துக்கும் நல்ல அடித்தளமாகும்” – என்றுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *