தமிழீழத்தைப் பெறவே தமிழ்க் கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாம்! – கூறுகின்றார் தினேஷ் எம்.பி.

“விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் ஆயுத வழியில் பெற முடியாமல் போன தமிழ் ஈழத்தை இராஜதந்திர வழியில் பெறலாம் என்ற நப்பாசையுடனேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு வழங்கியுள்ளனர்.”

– இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறுகையில்,

“ரணிலின் தீவிர விசுவாசியாக சுமந்திரனும், சுமந்திரனின் தீவிர விசுவாசியாக ரணிலும் உள்ளனர். அதை நாடாளுமன்றத்தில் நாம் நேரில் கண்கூடாகப் பார்த்துள்ளோம்.

ரணில் தலைமையில் புதிய அரசமைப்பு வரும் என்றும், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணையும் என்றும், சமஷ்டி வழியில் தமிழ் ஈழம் மலரும் என்றும் சுமந்திரனும் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கனவு காண்கின்றனர். இந்தக் கனவு ஒருபோதும் நனவாகாது.

ரணில் அரசின் அமைச்சரவை நியமனங்கள் ஊடாக சம்பந்தன் – சுமந்திரன் ஆகியோரின் ஆலோசனையின் பிரகாரம் நடைபெற்றது என நாம் அறிந்தோம்.

நாட்டில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக நீடித்த அரசியல் குழப்பங்களுக்கு ரணில், சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரே காரணம். அரசியல் குழப்பங்களின்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தன் துஷ்பிரயோகப்படுத்தியுள்ளார். தற்போது அவரின் பதவியும் பறிபோயுள்ளது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *