அதே டிசம்பர் மாதம் இந்தோனேசியாவில் சுனாமி! – 62 பேர் பலி

இந்தோனீசியாவின் சுந்தா நீரிணையில் ஏற்பட்ட சுனாமியில் குறைந்தது 62 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.அத்துடன், 584 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி ஞாயிறு அதிகாலை இந்தப் பேரிடர்  நிகழ்ந்துள்ளது.

ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள சுந்தா நீரிணை ஜாவா கடலையும், இந்தியப் பெருங்கடலையும் இணைக்கிறது. இந்த நீரிணையில் அமைந்துள்ள க்ரகடோவா தீவில் இருக்கும் எரிமலை வெடித்ததால், நிலத்துக்கு அடியில் உண்டான சரிவுகள் சுனாமி பேரலைகளை உண்டாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

1883ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த க்ரகடோவா எரிமலை வெடித்துச் சிதறியதுதான், நவீன வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய எரிமலைச் சீற்றமாகக் கருதப்படுகிறது.

பன்தேக்லங், தெற்கு லாம்பங் மற்றும் சேராங் பகுதிகளில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இருவரைக் காணவில்லை என்றும் பல கட்டடங்கள் சேதமாகியுள்ளன என்றும் அந்நாட்டு பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புண்டு என்றும் முழு நிலவு தினத்தையொட்டி அலைகளின் வேகம் அதிகமாக இருந்ததும் இழப்பை அதிகரித்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

சரியாக பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 26, 2004 அன்று 14 ஆசிய நாடுகளில் உண்டான சுனாமியால் 2.28 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறந்தனர். அந்த சுனாமிக்கு காரணமான நிலநடுக்கம் இந்தோனீசியாவின் வடக்குப் பகுதியை மையமாகக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *