மன்னாரிலும் கடும் மழை! பல குடும்பங்கள் நிர்க்கதி!!

மன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 36 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரி தெரிவித்தார்.

நேற்று (21) வெள்ளிக்கிழமை இரவு பெய்த கடும் மழையினால் மன்னார் மாவட்டம் தலைமன்னாரில் உள்ள மீள்குடியேற்ற கிராமமான ´பெல்வேறி´ கிராமத்தைச் சேர்ந்த 3 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தலைமன்னாரில் உள்ள பொது மண்டபம் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

பெல்வேறி கிராமத்தைச் சேர்ந்த 36 குடும்பங்களின் 102 பேர் பாதிப்படைந்துள்ள நிலையில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 நபர்களே இடம்பெயர்ந்து பொது மண்டபத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

குறித்த கிராம மக்களை அக்கிராமத்திற்குப் பொறுப்பான கிராம அலுவலகர் உடனடியாகச் சென்று பார்வையிட்டதோடு, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கும் தகவல் வழங்கியுள்ளார்.

மேலும் கிராம அலுவலகர் ஊடாக அந்த மக்களுக்கு உணவு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இராணுவத்தினரும் உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சென்று பார்வையிட்ட மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், வங்காலை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களுடைய 12 படகுகளும் சேதமாகியுள்ளன என்று குறித்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *