தனது இறுதிச்சடங்குக்கு தானே பொருட்களை வாங்கி வைத்துவிட்டு தலித் விவசாயி தற்கொலை

“வீட்டுக்குத் தேவையான சாமான்கள் வாங்குவதற்காக அருகில் உள்ள நகரத்துக்குச் சென்றவர் வீடு திரும்பவே இல்லை.

இருந்தபோதிலும், வாங்கிய வளையல்கள், வெள்ளைத் துணி, மஞ்சள், குங்குமம், பூமாலை என அவர் வாங்கியவை கிராமத்துக்கு வந்து சேர்ந்தன. துரதிருஷ்டவசமாக தனது இறுதிச் சடங்குக்காக அவற்றை வாங்கியிருந்ததால், எதுவுமே வீட்டு உபயோகத்துக்கானவையாக இருக்கவில்லை” இந்த வார்த்தைகளைக் கூறும்போது மாதவய்யாவின் தொண்டை துக்கத்தில் அடைத்தது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்த்பூர் மாவட்டம் கம்பதுரு மண்டல் பகுதியில் ராம்புரம் கிராமத்தைச் சேர்ந்த மாதவய்யாவின் தந்தை மல்லப்பா ஒரு விவசாயி. தனது இறுதிச் சடங்கு நடத்துவதற்குத் தேவையான, எல்லா பொருள்களுக்கும் ஏற்பாடு செய்துவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். தன் குடும்பத்தினருக்கு தனது நினைவாக இருக்கட்டுமே என்று தன் புகைப்படத்தையும் லேமினேட் செய்து வைத்திருந்தார்.

பயிர் விளைச்சலில் இழப்பு ஏற்பட்டதால், விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் 2018 ஆகஸ்ட் மாதம் மல்லப்பா தற்கொலை செய்து கொண்டார் என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இறந்த பிறகு தன்னுடைய இறுதிச் சடங்கிற்குத் தேவையான பொருள்களை வாங்கும் சுமையை குடும்பத்தினருக்கு தரக்கூடாது என்பதற்காக, அதற்கு வேண்டிய பொருள்களை வாங்கி வைத்திருந்தார் என்றும் தெரிவித்தனர்.

தன் மனைவிக்கு வெள்ளைத் துணி, வளையல்களும், இறந்த பிறகு இறுதிச் சடங்கிற்குத் தேவைப்படும் பூ மாலையும் அருகில் உள்ள நகரில் வாங்கிக் கொண்டு பொழுது சாயும்போது கிராமத்துக்கு வந்திருக்கிறார்.

சாலையோரம் உள்ள தனது விவசாய நிலத்துக்கு அவர் சென்று, அனைத்துப் பொருள்களையும் தனது தந்தையின் சமாதி மீது வைத்து, கடிதமும் வைத்துள்ளார். தனக்கு கடன் கொடுத்தவர்களுக்கு யாருக்கெல்லாம் எவ்வளவு தர வேண்டும் என்பதை அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார். கடன் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

மல்லப்பாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது, எனவே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம் அதை எழுதி வாங்கி, இந்தப் பொருள்களுடன் தனது பையில் வைத்திருந்தார்.

தன் விளைநிலத்துக்குச் செல்லும் போதெல்லாம் ஓய்வெடுக்கும் குடிசைக்குச் சென்று பூச்சி மருந்து குடித்துவிட்டார்.

மறுநாள் காலை கால்நடைகளை மேய்ப்பதற்காக மல்லப்பாவின் மகன் மாதவய்யா நிலத்துக்குக் கொண்டு சென்றபோது, தன்னுடைய தாத்தாவின் சமாதி மீது வைத்திருந்த பொருள்களைக் கவனித்திருக்கிறார். மாலை, வெள்ளைத் துணி, தந்தையின் லேமினேட் செய்த புகைப்படம் ஆகியவை சமாதி மீது இருந்ததால் சந்தேகம் அடைந்து சுற்றிலும் தேடியபோது, ஒரு கட்டில் மீது ஒருவர் படுத்திருப்பதைக் கவனித்தார்.

 

“ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று உணர்ந்து அந்தக் குடிசையை நோக்கி ஓடினேன். அது எனது தந்தை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்” என்று பிபிசி செய்தியாளரிடம் கண்ணீருடன் கூறினார் மாதவய்யா.

வறட்சி காரணமாகவும், பயிர்கள் விளைச்சல் தொடர்ந்து பாதிக்கப்பட்டதாலும் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போன ஒரு விவசாயி உடைய கதை இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *