புதிய அரசமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு சமாதிகட்ட வேண்டும்! – சபையில் சரவணபவன் எம்.பி. வலியுறுத்து

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையால் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்குமே சிக்கலும் பிரச்சினைகளும் அதிகமாகவே இருக்கின்றன. எனவே, அதனை நீக்கிவிட்டு மாற்று வழிகளைச் சிந்திக்க வேண்டியது அவசியம். அதனைப் பொறுமையோடும் புதிய அரசமைப்பின் ஊடாகவும் செய்வதுதான் புத்திசாலித்தனமும்கூட. அதைவிடுத்து கடந்த சில மாதங்களாக நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உணர்ச்சி வசப்பட்டு, பழிவாங்கும் வகையில் அவை நடந்தேறிவிடக்கூடாது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி. சமர்ப்பித்த சபை ஒத்திவைப்பு வேளை பி​ரேரணை மீது நேற்று இரண்டாவது நாளாகவும் விவாதம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சரவணபவன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பதைப் போல பிரதமர் யார் என்கிற சர்ச்சையில் இருந்து இப்போது எதிர்க்கட்சித் தலைவர் யார் என்கிற சர்ச்சைக்கு நகர்ந்திருக்கின்றோம். நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ, தனக்குப் பதவி ஆசை இல்லை என்று பிரதமர் பதவிக்கான அடிதடியின்போது இந்தச் சபையிலேயே கூறியிருந்தார். ஆனால், இப்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அவர் மீண்டும் போட்டி போடுவதைப் பார்க்கும்போது பதவி ஆசை யாரைத்தான் விட்டு வைத்தது என்று எண்ணத் தோன்றுகின்றது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிப்பேன் என்று வாக்குறுதி வழங்கிய இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த வாக்குறுதியிலிருந்து வழுகுவதன் காரணமாகவே அவர் பதவியில் இருக்கும்போதே நிறைவேற்று அதிகாரத்தை முற்றுமுழுதாக ஒழிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நாம் வலியுறுத்த வேண்டியதாக உள்ளது.

‘‘நாட்டை நிர்வகிப்பது அமைச்சரவை அல்ல; நாடாளுமன்றம் அல்ல; இந்த நாட்டை ஒரு குடும்பமே ஆட்சி செய்கின்றது. அதனூடாக நாடு உறுதித்தன்மையை இழந்துள்ளது. இந்த நிலை நீடித்தால் நாட்டில் பாரதூரமான நிலமை ஏற்படும். ஆகையால் நாட்டின் அரசியல் உறுதிப்பாட்டை வலுப்படுத்தி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு இந்த நாட்டில் சட்டவாட்சியை நாடாளுமன்றத்தின் ஊடாக உறுதிப்படுத்தி அனைத்தையும் பாதுகாத்து அரசியல் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தும் முக்கிய பொறுப்பை ஏற்றுள்ளேன். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நூறு நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்போடு இரத்துச் செய்து, அமைச்சரவை ஊடாகப் நாடாளுமன்றத்துடன் இணைந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசமைப்பொன்றை உருவாக்குவதே இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முக்கிய இலக்காகும்” என்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார் ஜனாதிபதி.

1978ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஜனாதிபதி முறைமையால் நாட்டு மக்கள் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்த பின்னர், காட்டுத்தனமான சர்வாதிகாரப் போக்குடைய ஒருவரின் கையில் இந்த அதிகாரங்கள் சென்றதன் விளைவாக இந்த நாடே அவரது குடும்பச் சொத்தாக மாற்றப்பட்டதன் விளைவை வெறுத்ததன் பின்னர், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையே வேண்டாம் என்று இந்த நாட்டு மக்கள் கொந்தளித்துக் கிடந்தபோதுதான் மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரத்தை 100 நாட்களுக்குள் முற்றாக ஒழிப்பேன் என்று கூறினார். அவரது அந்த வாக்குறுதியையும் நம்பித்தான் மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள். குறிப்பாகத் தமிழ், முஸ்லிம் மக்களும் முற்போக்குச் சிங்கள மக்களும் அவருக்கு வாக்களித்தார்கள்.

ஆனால், 19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதிப் பதவியின் அதிகாரங்கள் வெட்டிக் குறைக்கப்பட்டன. எனினும், முற்றாக அழிக்கபடவில்லை. இரண்டாவது தடவையாக நிறைவேற்று ஜனாதிபதியாகும் எண்ணம் தமக்கில்லை என்று மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே கூறியிருந்ததன் அடிபடையில் நிறைவேற்று அதிகார முறைமையை முற்றிலுமாக அழிப்பதற்கு அவர் ஒருபோதும் எதிராக இருக்கமாட்டார் என்கிற நம்பிக்கையிலேயே பெரும்பான்மையான மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள். ஆனால், ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதற்கான அதிகாரத்தைதத் தவிர மிகுதி அனைத்து அதிகாரங்களையும் வழங்கும் ஜனாதிபதிப் பதவியில் இருந்த பின்னர் மீண்டும் அந்தப் பதவியில் அமர்வதற்கும் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கோலோச்சுவதற்கும் அவர் தயாராகிவிட்டார் என்பது கவலைக்குரியது. அவரது இந்த உள்நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே அண்மையை அரசியல் நெருக்கடியையும் குழப்பங்களையும் ஏற்படுத்தினார் என்றும்கூட விமர்சிக்கப்படுகின்றது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

‘‘கடந்த மூன்­றரை வரு­டங்­க­ளுக்கு மேலாக இலங்­கை­யின் ஜனாதிபதியாகச் செயற்­பட்­டு­வ­ரும் என்­னால், நாடும் அர­சும் அடைந்­தி­ருக்­கும் முன்­னேற்­றத்தைப் பற்றி மிக­வும் மகிழ்ச்­சி­ய­டை­யக் கூடி­ய­தாக உள்­ளது. 2015 ஜன­வரி 8 ஆம் திகதி மக்­க­ளின் வாக்­கு­க­ளால் தெரி­வு­செய்­யப்­பட்டு இலங்­கை­யின் ஜனாதிபதியாகப் பொறுப்­பேற்­ற­போது, எனது நாட்­டில் தற்­போது நான் வகிக்­கும் பத­விக்­காக வழங்­கப்­பட்­டி­ருந்த எல்­லை­யற்ற நிறை­வேற்று அதி­கா­ரங்­கள், அதா­வது ஓர் அர­ச­னுக்­கும் அப்­பால் பேர­ர­ச­னுக்­கான அதி­கா­ரங்­க­ளுக்குச் சமமாக இருந்த எல்­லை­யற்ற அதி­கா­ரங்­களை, இந்தக் கால­கட்­டத்­தில், அந்தப் ப­த­வியை ஏற்­கின்ற ஓர் அரச தலை­வன் என்ற வகை­யி­லும் ஒரு மனி­தன் என்ற வகை­யி­லும் முன்­னெ­டுக்க வேண்­டிய மிக முக்­கி­ய­மான வரலாற்றுக் கட­மை­யாக இருந்த, எனக்குக் கிடைத்­தி­ருந்த அந்த எல்­லை­யற்ற அதி­கா­ரங்­களைக் குறைத்து அவற்றை இலங்­கை­யின் நாடா­ளு­மன்­றத்துக்குக் கைய­ளிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டேன் என்­பதை இங்கே தெரி­விப்­ப­தில் மகிழ்ச்­சி­ய­டை­கி­றேன்” என்று கடந்த செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றும்போதுகூட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். ஆனால், அந்த உரை ஆற்றப்பட்டு ஒரு மாத காலம் முடிவதற்குள்ளாவே, எந்த அதிகாரத்தைத் தான் இழந்தமை பெருமைப்படும் விடயம் என்று கூறியிருந்தாரோ அதேபோன்று எஞ்சிய அதிகாரங்களையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அவர் முன்வந்து செயற்பட்டிருக்கவேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.

ஜனாதிபதி இந்த உரையை ஆற்றுவதற்கு ஒரு வருடம் முன்னதாக 2017ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையில் ஆற்றிய உரையும் இங்கு குறிப்பிட்டுக் கூறப்படவேண்டியது.

‘‘2015 ஜனவரியில் இலங்கை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருதேன். அவ்வாறு தெரிவு செய்யப்பட முன்னர் எனது அன்புக்குரிய நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தேன். அதில் நான் விசேடமாக குறிப்பிட்ட விடயம், உலகில் எந்தவொரு நாட்டுத் தலைவருக்கும் இல்லாத அதிகாரங்கள் இலங்கையின் ஜனாதிபதிக்கு இருப்பதனால் நான் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த அதிகாரங்களை ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலக்கி நாட்டின் நாடாளுமன்றத்திடம் ஒப்படைப்பதான வாக்குறுதியாகும். ஆட்சிக்கு வந்த தலைவர், அரசமைப்புக்கமைய அளவற்ற அதிகாரங்களுடன் ஆட்சியில் இருக்கும்போது அந்த அதிகாரங்களை மீள ஒப்படைத்த அரச தலைவரென்ற ரீதியில் எனது நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் அதிகாரத்தை கைவிடுவது தொடர்பான முன்மாதிரியை நான் வழங்கியுள்ளேன். ஜனநாயகத்தை பாதுகாத்து போசிக்கும் நாடுகளில் ஆட்சிக்குவரும் தலைவர்கள், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் அதிகாரத்தை உரியவாறு பயன்படுத்துவதற்கும், நியாயமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக தமது அதிகாரத்தை பயன்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். ஆயினும், கடந்த பல தசாப்தங்களாக உலக வரலாற்றை நோக்கும்போது பல தலைவர்கள் அதிகாரத்திலிருந்து விலகிச் செல்ல விரும்பாமை காரணமாக அந்த நாட்டின் சமாதானம் சீர்குலைவதுடன் அது சர்வதேச ரீதியிலான பல்வேறு விதமான பிரிவுகளுக்கும் கரணமாக இருப்பதனைக் காணமுடிகின்றது. அவ்வாறான வரலாற்றுத் தகவல்கள் பற்றிய, உள்நாட்டு வெளிநாட்டு ஏராளமான அனுபவங்கள் எமக்கு இருக்கின்றன. அவ்வாறான நிலைமையில் எனது நாட்டில் ஜனநாயக்தை உறுதிப்படுத்தி ஏகாதிபத்திய அரசியலை கொண்டு நடத்திய அரசியல் குழுக்களை அகற்றி நாட்டில் மக்களின் சுதந்திரத்தையும் ஜனநாயக்தையும் உறுதிப்படுத்தி, ஜனநாயகத்தை பாதுகாத்து அடிப்படை உரிமைகளை மேம்படுத்தி கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெற்றிகரமாக பயணித்துள்ளேன் என்பதை இந்த கௌரவம் மிக்க சபையில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது உரையில் அப்போது ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்திருந்தார்.

அவரது இந்த உரையில் தீர்க்க தரிசனத்துடன் அவர் கூறியிருந்த ஒரு விடயம் கவனிக்கப்படவேண்டியது. ‘‘கடந்த பல தசாப்தங்களாக உலக வரலாற்றை நோக்கும்போது பல தலைவர்கள் அதிகாரத்திலிருந்து விலகிச் செல்ல விரும்பாமை காரணமாக அந்த நாட்டின் சமாதானம் சீர்குலைவதுடன் அது சர்வதேச ரீதியிலான பல்வேறு விதமான பிரிவுகளுக்கும் கரணமாக இருப்பதனைக் காணமுடிகின்றது’’ என்று அவர் கூறியிருக்கிறார். அதுபோன்றே அதிகாரத்திலிருந்து விலகிச் செல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பாததன் காரணமாகவே இலங்கையிலும் சமாதானம் சீர்குலைந்தது என்பதை கடந்த சில மாதங்களாகக் கண்கூடு கண்டுள்ளோம்.

எப்படியிருந்தாலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பேன் என்று நாட்டு மக்களுக்குத் தான் வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நாடாளுமன்றத்துடன் சேர்ந்து நிறைவேற்றவேண்டும். அத்தகைய முயற்சிகள் எதற்கும் அவர் முட்டுக்கட்டை போட முற்படக்கூடாது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது, பெரும்பான்மையில் மட்டும் தங்கியிருக்கும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை சமநிலைப்படுத்துவதற்கான பொறிமுறையைச் சிதைக்கும் நடவடிக்கை என்கிற கவலை, கரிசனை தமிழ், முஸ்லிம், மலையகச் சமூகங்களுக்கு இருக்கின்றது என்பதை நான் மறக்கவில்லை.

நாட்டின் அதிகார மையங்களைத் தீர்மானிப்பதில் தமிழ், முஸ்லிம், மலையகச் சமூகங்களின் வகிபாகத்தை அல்லது பலத்தை நிலைநாட்டக்கூடிய வாய்ப்பை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தருகின்றது என்கிற கருத்தை அண்மையில் இந்த விவகாரம் பேசு பொருளானபோது இந்த அவையில் அமர்ந்திருக்கும் பல கட்சிகளின் கௌரவ தலைவர்கள், உறுப்பினர்கள் சுட்டிக்கட்டியிருந்தார்கள். எனினும், அவர்களின் கருத்தும்கூட நிறைவேற்று அதிகார முறையை முற்றிலும் ஒழிப்பதற்கு எதிரானது இல்லை.

தமிழ், முஸ்லிம், மலையகச் சமூகங்களின் உரிமைகள் அரசமைப்பின் ஊடாக முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டு எல்லாச் சமூக மக்களும் இலங்கை நாட்டில் சமத்துவமாக வாழமுடியும் என்கிற சூழல் ஒன்று ஏற்படுத்தப்படுவதற்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை யை ஒழிக்கப்படுவது ஆபத்தானது என்கிற கரிசனை காரணமாகவே அவர்கள் இந்த எதிர்ப்பை முன்வைத்திருந்தார்கள். அது முற்றிலும் உண்மையும்கூட.

மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மை உறுப்பினர்களைச் சிங்களவர்களாகக் கொண்ட இந்தச் சபையில் தமிழ், முஸ்லிம், மலையகச் சமூகங்களின் உரிமைகள் முறைப்படி உறுதிப்படுத்தப்படாத நிலையில் நிறைவேற்று அதிகார முறைமையையும் ஒழித்துவிடுவது கரிசனைக்குரிய செயல்தான்.

மலையகத்தில் இருந்து தமிழர்கள் இந்தியாவுக்குத் திருப்பியனுப்பப்பட்டமைக்கு நாடாளுமன்றத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருப்பதே முக்கிய காரணம் என்பதை மறந்துவிட முடியாது. அதுபோன்ற ஆபத்துக்கள் பற்றிச் சிந்திக்காமல் இருக்குமளவுக்கு இந்தச் சபையில் உள்ள உறுப்பினர்கள் புனிதர்களோ, பகுத்தறிவாளர்களோ இல்லை என்பதைக் கடந்த சில வாரங்களில் நிரூபித்திருக்கின் றார்கள். எனவே, நாடாளுமன்றப் பெரும்பான்மை அதிகாரத்தைச் சமநிலைப்படுத்தி தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கு ஓரளவுக்குப் பாதுகாப்பை வழங்கக்கூடிய சமநிலைத் தன்மையை நிறைவேற்று ஜனாதிபதி முறைமை கொண்டிருக்கின்றது என்பது உண்மைதான்.

ஆனால், ஜனாதிபதியாக ஒரு கட்சியைச் சேர்ந்தவர் இருக்கும்போதும் நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டை மற்றொரு கட்சியைச் சேர்ந்தவர்களும் வைத்திருக்கும்போதும்தான் அத்தகையதொரு சமநிலைத் தன்மை இருக்க முடியும். இரு அதிகாரங்களுமே ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களிடம் இருக்கும்போது இதே தமிழ், முஸ்லிம், மலையகச் சமூகம் இரு குழல் பீரங்கித் தாக்குதலுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை மறந்துவிட முடியாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அதுதான் நடந்தது என்பதையும் மறந்துவிட முடியாது.

எப்படிப் பார்த்தாலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையால் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்குமே சிக்கலும் பிரச்சினைகளும் அதிகமாகவே இருக்கின்றன. எனவே, அதனை நீக்கிவிட்டு மாற்று வழிகளைச் சிந்திக்க வேண்டியது அவசியம். அதனைப் பொறுமையோடும் புதிய அரசமைப்பின் ஊடாகவும் செய்வதுதான் புத்திசாலித்தனமும்கூட. அதைவிடுத்து கடந்த சில மாதங்களாக நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உணர்ச்சி வசப்பட்டு, பழிவாங்கும் வகையில் அவை நடந்தேறிவிடக்கூடாது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *