மஹிந்த தாமரை மொட்டுடன் சங்கமிக்கவில்லை – சபாநாயகருக்கு கடிதம்!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்னும் அக் கூட்டமைப்பிலேயே அங்கம் வகிக்கின்றனர் என்று ஐ.ம.சு.கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர், சபாநாயகருக்கு கடிதம்மூலம் அறிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ள நிலையில், அவர் கட்சி மாறி பொதுஜன பெரமுனவில் உறுப்பினரானதால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியே பறிபோய்விட்டதாகவும், எனவே அவர் எதிர்க்கட்சித் தலைவராக முடியாது என்றும் வாதங்கள் வைக்கப்பட்ட நிலையில், இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவரான மஹிந்த ராஜபக்ச,  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக 2015-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட, தாமரை மொட்டு சின்னம் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில், கடந்த நவம்பர் மாதம் மஹிந்த ராஜபக்ஷ உறுப்பினராக சேர்ந்தார்.

இதனையடுத்து, அரசியலமைப்பின் பிரகாரம் ஒருவர் எந்தக் கட்சியில் வேட்பாளராக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டாரோ, அந்தக் கட்சியிலிருந்து விலகுவதன் மூலம் அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமை இல்லாமல் போகும் என்கிற வாதம் தற்போது முன்வைக்கப்பட்டு வருதோடு, நாடாளுமன்றத்திலும் இது குறித்து பேசப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு சட்டச் சிக்கல் உருவானதை அடுத்தே, மஹிந்த ராஜபக்ஷ இன்னும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதாகவும், அவர் கட்சி மாறவில்லை எனவும் நிரூபிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

மேலும், சுதந்திரக் கட்சியில் அங்கத்துவப் பணத்தை மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் செலுத்தி வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *