‘ஐஎஸ் தோற்றுவிட்டது’ – சிரியாவில் துருப்புகளை விலக்கியது அமெரிக்கா – அடுத்தது என்ன ?

சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதையடுத்து, போர் நடந்து வரும் சிரியாவில் இருந்து தனது படைகளை அமெரிக்கா திரும்ப பெற்றுவருவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்த அமெரிக்காவின்பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் மேற்கொண்டு எந்த தகவலையும் கூறவில்லை. இது தொடர்பான அடுத்த கட்டம் அல்லது நகர்வு என்ன என்பது பற்றி பென்டகன் தகவல் எதுவும் வெளியிடவில்லை.

துருப்புகளின் பாதுகாப்பு மற்றும் அலுவல் ரீதியான காரணங்களால் இது குறித்து மேற்கொண்டு எந்த தகவலையும் பென்டகன் வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.

சிரியாவில் வரலாற்று வெற்றிகளை பெற்றுள்ள அமெரிக்க துருப்புகளை நாட்டுக்கு மீண்டும் அழைக்க இதுவே சரியான நேரம் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இந்த முடிவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இருவேறு கருத்துகள் இனி வரும் நாட்களில் உலவக்கூடும். ஆனால், எப்போது எப்படிப்பட்ட சூழலில் சிரியாவில் காலடி எடுத்துவைக்க அமெரிக்கா தீர்மானித்தது என்பதை இக்கணத்தில் நினைவுகூற வேண்டும்.

கடந்த 2015-ஆம் ஆண்டில் முதல்முறையாக அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் உத்தரவின்பேரில் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினரோடு போரிட்டு வந்த உள்ளூர் குர்தீஷ் போராட்டக்காரரர்களுக்கு உதவிட அமெரிக்க துருப்புகள் அங்கு சென்றனர்.

இதற்கு முன்னர் பலமுறை ஐஎஸ் எதிர்ப்பு அமைப்பினருக்கு ஆயுதம் வழங்கிடும் மற்றும் பலமாக்கிடும் முயற்சிகள் குழப்பத்தில் முடிந்ததால் மிகுந்த தயக்கத்துடனே இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்தது.

தற்போது வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க சுமார் 2,000 அமெரிக்கப்படையினர் உதவி செய்தனர். ஆனால், இன்னமும் சில பகுதிகளில் சண்டை நடந்துகொண்டுதான் இருக்கிறது.

ஐ.எஸ். குழுவினர் மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுப்பதற்காக அங்கே மேலும் சிலகாலம் தங்கியிருக்கவேண்டும் என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நினைப்பதாகக் கருதப்பட்டது.

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிப்பதற்கான உலகளாவிய கூட்டணிக்கான அமெரிக்கத் தூதரான பிரெட் மெக்கர்க் சில நாள்களுக்கு முன்பு இது பற்றிக் கூறும்போது, “ஐ.எஸ். தீவிரவாதிகள் இல்லாமல் போய்விடுவார்கள் என்று யாரும் சொல்லவில்லை. யாரும் அவ்வளவு விவரமில்லாதவர்கள் இல்லை. எனவே நாங்கள் களத்தில் நீடித்து நிற்கவும், அதன் மூலம் இந்தப் பகுதிகளில் ஸ்திரத்தன்மை நிலவுவதை உறுதி செய்யவும் விரும்புவதாக ” தெரிவித்தார்.

ஆனால், வடக்கு சிரியாவில் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் குர்து போராளிகள் மீது தாக்குதல் தொடுக்க தயாராகிவருவதாக துருக்கி தெரிவித்திருந்த நிலையில் தற்போது அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுவது குறித்த தகவல்கள் வெளியாகின்றன. துருக்கி அத்தகைய தாக்குதலைத் தொடுக்குமானால், அது அமெரிக்காவும் துருக்கியும் மோதும் நிலைக்கு கொண்டு செல்லும்.

ஐ.எஸ். தீவிரவாதக் குழு முற்றிலும் அழிந்துவிடவில்லை. சிரியாவில் இன்னமும் 14,000 ஐ.எஸ். போராளிகள் இருப்பதாகவும், இதைவிட அதிக எண்ணிக்கையில் அருகில் உள்ள இராக்கில் அவர்கள் இருப்பதாகவும் சமீபத்திய அமெரிக்க அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இத்தீவிரவாதக் குழுவினர் கொரில்லா போர்முறைக்கு மாறி தங்கள் அமைப்பை மீண்டும் கட்டமைக்க முயல்வார்கள் என்ற அச்சமும் நிலவுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *