சபைமுதல்வராக கிரியல்ல – ஆளுங்கட்சி கொறடாவாக கயந்த! எதிர்க்கட்சித் தலைவர் பதவி மஹிந்த அணி வசம்!!

சபை முதல்வராக லக்ஸ்மன் கிரியல்லவும், ஆளுங்கட்சி பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலக்கவும் நியமிக்கப்படவுள்ளனர். இன்றைய தினம் இருவரும் கடமைகளைப் பொறுப்பேற்பார்கள்.

ஒக்டோபர் 26 ஆம் திகதி ‘சூழ்ச்சி அரசு’ அமைக்கப்பட்ட பின்னர், சபை முதல்வராக தினேஸ் குணவர்தனவும், கொறடாவாக எஸ்.பி. திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டனர். நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மஹிந்த, மைத்திரி கூட்டணி அவசர அவசரமாக மேற்படி நடவடிக்கையை எடுத்திருந்தாலும் அம்முயற்சி கைகூடவில்லை.

‘சூழ்ச்சி அரசு’ தற்போது கவிழ்ந்துள்ளது. பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே நாடாளுமன்றத்துக்குள் மஹிந்த அணியால் பறிக்கப்பட்ட பதவிகளுக்கு, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

லக்ஸ்மன் கிரியல்ல, கயந்தகருணாதிலக்க ஆகிய இருவரும், ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு முன்னர் மேற்படி பதவியை வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்கட்சிப் பதவி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வழங்கப்படவுள்ளது. இதன்படி எதிர்க்கட்சித் தலைவராக நிமல்சிறிபாலடி சில்வாவும், கொறடாவாக தினேஸ் குணவர்தனவும் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *