மும்பை அரச மருத்துவமனையில் தீ விபத்து! – 8 பேர் பரிதாப மரணம்

மும்பை அரச மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

மும்பையில் பரபரப்பான அந்தேரி மரோல் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான ‘காம்கார்’ என்ற தொழிலாளர் நல மருத்துவமனை உள்ளது. 5 மாடி கட்டடத்தில் இயங்கி வரும் இந்த மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

நேற்று மாலை 4 மணியளவில் மருத்துவமனையின் 4ஆவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. இதன் காரணமாக அதிகளவில் கரும்புகை வெளியேறி கொண்டிருந்தது. சிறிது நேரத்திலேயே மருத்துவமனை பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. தீ விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் பதறிபடி ஓட்டம் பிடித்தனர்.

மருத்துவமனை மாடிகளில் உள்ள வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த உள்நோயாளிகளும் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அலறி அடித்துக்கொண்டு கீழே இறங்கினார்கள். நோய் தீவிரம் காரணமாக எழுந்திருக்கவும், நடக்கவும் முடியாத நிலையில், படுக்கைகளில் பல நோயாளிகள் கிடந்தனர். அவர்கள் தங்களை காப்பாற்றும்படி கூச்சல் போட்டனர். புகையின் காரணமாக நோயாளிகள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனால் தப்பிக்க வழி தெரியாமல் அவர்கள் பரிதவித்தனர். உயிரை கையில் பிடித்துக்கொண்டு உதவி கேட்டு கதறினர்.தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் வாகனங்களில் விரைந்து வந்தனர்.கரும்புகை கக்கியபடி தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதனால் தீயணைப்பு படையினருக்கு தீயை அணைக்கும் பணி சவாலாக இருந்தது. தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினார்கள். 12 வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தன.

தீயணைப்பு படையினர் ஆஸ்பத்திரிக்குள் இருந்து ஏராளமானோரை மீட்டனர். இவர்களில் பலர் தீக்காயம் அடைந்து இருந்தனர். மற்றவர்கள் புகையில் சிக்கி மூச்சு திணறி மயங்கிய நிலையில் இருந்தனர்.

உடனடியாக அவர்கள் அனைவரும் ஆம்புலன்சுகள் மூலம் கூப்பர், செவன்ஹில்ஸ் உள்பட 5 மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு நடத்திய பரிசோதனையில் இவர்களில் 6 நோயாளிகள் பலியானது தெரியவந்தது. இதில் 2 வயது குழந்தையும் அடங்கும். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 இலட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று மராட்டிய அரசு அறிவித்துள்ளது. பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 2 இலட்சமும், இலேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 இலட்சம் வழங்கப்படும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *