மஹிந்தவை எப்படி அழைப்பது? சபைக்குள் ஹக்கீமுக்கு வந்த சந்தேகம்!

நாட்டின் அரசியலமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கோ, ரணில் விக்கிரமசிங்கவுக்கோ, மஹிந்த ராஜபக்ஷவுக்கோ சொந்தமானதல்ல. அதுவொரு நிலையான ஆவணம். இந்த நாட்டின் முழுமையான ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்த வல்லது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இன்று (18) பாராளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பது மற்றும் ஜே.வி.பி. முன்மொழிந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஆகியவற்றின் மீது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இரு தடவைகள் உரையாற்றிய ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;
51 நாட்களாக நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் கொந்தளிப்பபை சுமூக நிலைக்கு கொண்டுவருவதற்கு போராடிய சகல அரசியல் கட்சிகளுக்கும், சிவில் சமூக அமைப்புகள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். தற்போது ஜனநாயகம் நிலைநாட்டப்பட்ட நிலையில் அமைதியான நிலையில் பாராளுமன்றம் ஒன்றுகூடியுள்ளது.
இன்று காலை ‘டெய்லி மிரர்’ குறுஞ்செய்தியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர், மஹிந்த ராஜபக்ஷவை எதிர்கட்சித் தலைவராக பிரேரிக்க தீர்மானித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ராஜபக்ஷவோடு எனக்கு தனிப்பட்ட எதுவுமில்லை. மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினரா என்பதில் பிரச்சினையிருக்கிறது. அவரை கெளரவ எனக் குறிப்பிடுவதா அல்லது திரு எனக் குறிப்பிடுவதா என்ற கேள்வி எழுகிறது.
உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் சட்டத்தரணிகளாக இருந்தும், ஜனாதிபதியை மைத்திரிபால சிறிசேனவை தவறாக வழிநடத்தியிருக்கிறார்கள். அது மட்டுமல்லாது மஹிந்த ராஜபக்ஷவையும் பாரதூரமான சிக்கலுக்குள் மாட்டிவிட்டார்கள்.
தேர்தல் ஆணையாளரை அழைத்து விசாரிக்கலாம். ஏனென்றால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் யாப்பு தேர்தல் திணைக்களத்தில் உள்ளது. அதன் பங்காளிக் கட்சிகள் எவை, அவற்றில் உறுப்பினர்கள் யாவர் என்பது பற்றி ஆணையாளரிடம் கேட்கலாம்.
அரசியலமைப்பின் 99 (13)ஆவது உறுப்புரை இங்கு கவனிக்கத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவிநீக்கப்பட்டால் ஒரு மாதத்துக்குள் நீதிமன்றத்துக்கு செல்லாம். ஆனால், ஒரு கட்சியிலிருந்து வேறு கட்சியில் அங்கத்துவம் பெற்றவுடனேயே அவர் பாராளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியை உடனடியாகவே இழந்துவிடுகிறார்.
1982ஆம் ஆண்டிலிருந்து அடுத்தடுத்து வந்த ஜனாதிபதிகள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு பதிலாக தக்கவைத்துக்கொள்ளவே எத்தனித்து வந்திருக்கிறார்கள். 2001, 2004ஆம் ஆண்டுகளில் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதிகள் வேறு அரசாங்களின் கீழ் பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.
2004ஆம் ஆண்டில் சந்திரிகா அம்மையார் ஜனாதிபதியாக இருந்தபோது, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு நேர்ந்தது. அதற்கு மூலகாரணமாக நான் இருந்திருக்கிறேன். எனது பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாங்கள் அரசாங்கத்தைவிட்டு விலகியதால் ஐந்து மாதங்களுக்குள் ஆட்சி கவிழ்ந்தது.
இரு மையங்களுக்கிடையிலான அதிகாரப் போட்டி அரசியல் சகவாழ்வை இல்லாமல்செய்தது. மஹிந்த ராஜபக்ஷவை பதவியிலிருந்து அகற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து நாங்கள் எல்லோருமாக முயற்சித்தோம். அதற்கு மக்கள் விடுதலை முன்னணியும் ஆதரவளித்தது.
இரு அதிகார மையங்களுக்கிடையில் ஆட்சியை கொண்டுசெல்லும் நிலைமை தொடர்கிறது. நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதோடு, தேர்தல் முறைமையும் தொடர்புபட்டிருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணி வேறுபட்ட காரணங்களுக்காக நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்கப்பட வேண்டும் என்கிறது.
அதை அரசியலமைப்பிலிருந்து முழுமையாக நீக்குவது எப்படி சாத்தியமாகும்? அதிகாரப் பரவலாக்கத்துக்கு என்ன நடக்கும்? நிறைவேற்று அதிகார முறையைமை இல்லாதொழிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையால் நிறைவேற்றுவதால் மட்டும் போதாது. அதற்கு உயர்நீதிமன்றம் இடமளிக்காது. ஆகையால் சர்வஜன வாக்களிப்பு வெற்றிபெற வேண்டுமானால் முழு நாட்டு மக்களும், சகல தரப்பினரும் அதில் திருப்தியை வெளிப்பட்டுத்தியிருக்க வேண்டும்.
மக்களுக்கு பகுதியளவிலான மாற்றங்கள் மட்டும் போதாது. அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் முழுமையானதாகவும் அவை இருக்கவேண்டும். முழுமையானதாக இருப்பதற்கு உரிய முறையில் அவை பரிசீலிக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில்தான் அரசிலயமைப்பு வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டு அதன் கடமையை பாராளுமன்றத்தில் முன்னெடுத்தது.
அறிக்கையை நாங்கள் விவாதித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் உரிய நகர்வுகளை மேற்கொண்டு சில புரிந்துணர்வுகளை ஏற்படுத்திக்கொண்டோம். மக்கள் விடுதலை முன்னணி நிறைவேற்று அதிகார முறையை தேவையே இல்லை என்கிறது. சில தரப்பினர் தேர்தல் முறையில் உரிய மாற்றங்களை கோருகின்றனர். அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வு பற்றி சிலர் பேசுகின்றனர்.
அரசியலமைப்பு சபைக்கு நீதிபதிகளின் நியமனம் பற்றிய பாரதூரமான நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருந்து வருகிறார். சிரேஷ்ட நீதியரசர்கள் பங்குபற்றுதல் பற்றிய அவரது கருத்தை பிரதமர் பதவியேற்றததை தொடர்ந்து நடந்த கூட்டத்தில் எங்கள் மத்தியில் தெரிவித்தார்.
ஜனாதிபதியும், பிரதமரும், மஹிந்த ராஜபக்ஷவும் மூன்றுவிதமாக சிந்திக்கின்றனர். அவர்களது எதிர்காலத்தை மையப்படுத்தி, அரசியல் நோக்கங்களை முன்வைத்து இந்த விடயத்தில் வெவ்வேறு விதமாக சிந்திக்க தலைப்பட்டுள்ளனர். நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை முறையை ஒழிப்பதோ, மாற்றம் செய்வதோ, வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்ற முறையை மீள் அறிமுகம் செய்வதோ இந்த மூன்று தனிநபர்களின் விருப்பு, வெறுப்புகளுக்கு மட்டும் உரியதாக இருப்பதை அனுமதிக்க முடியாது.
இந்த நாட்டின் அரசியலமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கோ, ரணில் விக்கிரமசிங்கவுக்கோ, மஹிந்த ராஜபக்ஷவுக்கோ சொந்தமானதல்ல. அதுவொரு நிலையான ஆவணம். இந்த நாட்டின் முழுமையான ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்த வல்லது. மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்கவேண்டும் என்பது அவர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்பதினாலே ஆகும்.
ரணில் விக்கிரமசிங்க விவேகமானவர், புத்திக்கூர்மையுள்ளவர். ஆனால், கடந்த இரண்டு ஜனாதிபதி தேர்தல்களில் அவர் போட்டியிடவில்லை. வேறு வேட்பளர்கள் போட்டியிட இடமளித்தார். பாராளுமன்றத்தில் பிரதமராக இருந்துகொண்டு அதற்கான நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக அரசாங்கத்தை வழிநடத்த அவர் முன்வந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று முறையை ஒழிப்பதாக நாட்டு மக்களிடம் வாக்குறுதி அளித்துவிட்டு, இப்பொழுது அதனை மீண்டும் ருசித்து அனுபவிக்க ஆசைப்படுகிறார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *