பௌத்த மதத்துக்கு முன்னுரிமை! தமிழ்க் கூட்டமைப்பு இணக்கம்!! – பொன்சேகா தெரிவிப்பு

“நாடாளுமன்ற சம்பிரதாயத்தை மதித்தே ஆட்சியை எம்மிடம் ஒப்படைத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். ஆனால், உண்மை அதுவல்ல, மக்கள் எழுச்சி – பலத்துக்கு அஞ்சியே ஆட்சி எம்மிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.”

– இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான ‘பீல்ட் மார்ஷல்’ சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று மாலை நடைபெற்ற ‘ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி’ வெற்றிக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளது எனச் சிலர் போலிப் பிரசாரம் முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறு எவ்வித உடன்படிக்கையும் செய்துகொள்ளப்படவில்லை. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே கூட்டமைப்பு எம்முடன் கரம் கோர்த்தது. இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே நாம் அரசியல் நடத்தி வருகின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கவில்லை. பௌத்த மதத்துக்கு தற்போது வழங்கப்படும் முன்னுரிமையை அப்படியே நீடிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஜனாதிபதியை நான் விமர்சிக்க விரும்பவில்லை. இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட ஒரு விடயத்துக்கு பதிலளிக்கவேண்டும். நாடாளுமன்ற சம்பிரதாயத்தை மதித்தே ஆட்சியை எம்மிடம் ஒப்படைத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். ஆனால், உண்மை அதுவல்ல, மக்கள் எழுச்சி – பலத்துக்கு அஞ்சியே ஆட்சி எம்மிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *