புதிய அரசமைப்பு நிறைவேற வேண்டும்! – ரணிலிடம் சம்பந்தன் வலியுறுத்து

“ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசில் இணைந்து செயற்படுவதற்கு ஏனைய கட்சிகள், தரப்புகளில் இருந்து வரும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரவணைத்துக் கொள்ளுங்கள். புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு அனைவரினதும் ஆதரவு எமக்குத் தேவை.”

– நேற்று முற்பகல் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க, அதற்கு முன்னர் தம்மைத் தேடிச் சந்திக்க தமது இல்லத்துக்கு வந்தபோது அவரிடம் இப்படி நேரில் ஆலோசனை கூறினார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன்.

ரணில் விக்கிரமசிங்க நேற்றுப் பிரதமர் பதவியை ஜனாதிபதி முன்னிலையில் ஏற்க முன்னர், உடல்நலக் குறைவால் இரு தினங்கள் கொழும்பு ‘லங்கா’ (அப்பலோ) தனியார் வைத்தியசாலையில் தங்கி நின்று சிகிச்சை பெற்றுவிட்டு தனது உத்தியோகபூர்வ இல்லத்துக்குத் திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நேற்றுமுன்தினம் மாலை நேரில் சென்று சந்தித்தார். சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும் உடனிருந்தார்.

தமது ஐக்கிய தேசிய முன்னணி அரசில் சேர்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தரப்பிலிருந்து சில எம்.பிக்கள் விரும்புகின்றனர் என்ற தகவலை இந்தச் சந்திப்பின்போது சம்பந்தனுக்குத் தெரியப்படுத்திய ரணில், அது தொடர்பில் கூட்டமைப்புத் தரப்பின் கருத்தை சம்பந்தனிடம் கேட்டார்.

ஐ.தே.மு. அரசில் இணைவதற்கு வரும் அனத்து எம். பிக்களையும் ஒருவரைக்கூட வெளியே விடாமல் அரவணைதுக் கொள்ளும்படி ஆலோசனை கூறிய சம்பந்தன், இந்த அரவணைப்பு தனித்துப் புதிய அரசமைப்பை நிறைவேற்றச் செய்யும் நோக்கத்துக்கானதாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அரசுக்கு வெளியில் கூட்டமைப்பும் ஜே.வி.பியும் சேர்ந்து 20 எம்.பிக்களைக் கொண்டிருக்கின்றன. புதிய அரசு, இனப்பிரச்சினைத் தீர்வையும் உள்ளடக்கிய புதிய அரசமைப்பை நிறைவேற்றச் செய்வதற்குத் தேவையான நாடாளுமன்றப் பலத்தை பெறுவதற்காகத் தனது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 130 ஆக அதிகரிக்க முயல வேண்டும் என்றும் சம்பந்தன் இந்தச் சந்திப்பின்போது ரணிலிடம் வலியுறுத்திக் கூறினார்.

வடக்கு, கிழக்குத் தமிழர்களின் விவகாரங்களுடன் சம்பந்தப்பட்ட சில முக்கிய அமைச்சுக்கள் தொடர்பில் நியமிக்கப்படக் கூடிய அமைச்சர்கள் விடயத்தில் தங்கள் எதிர்பார்ப்பையும் நிலைப்பாட்டையும் சம்பந்தனும் சுமந்திரனும் இந்தச் சந்திப்பின்போது ரணிலிடம் வெளிப்படையாகவே வலியுறுத்திக் கூறினர்.

இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தன் தரப்பின் கருத்தை அறிந்து, மனம் விட்டுப் பேசி, அமைச்சர் நியமனங்களை இணக்கமாக முன்னெடுக்கும் முயற்சியாகவே சம்பந்தனை அவர் இல்லம் தேடிச் சென்று ரணில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *