காணிகளை உடன் விடுவிக்குமாறு படையினருக்கு மைத்திரி பணிப்பு!

“வடக்கு, கிழக்கில் தனியாருக்குச் சொந்தமான காணிகளில் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாயச் செயற்பாடுகள் மேலும் தொடரப்படுவதை அனுமதிக்க முடியாது. அத்தகைய காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.”

– இவ்வாறு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு அறிவுறுத்தலை வழங்கினார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இதற்கு முன்னரான நான்கு அமர்வுகளின்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள், அவற்றின் சாதகத் தன்மைகள் தொடர்பாகவும், அந்தத் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் காணப்படும் தடைகள் பற்றியும், அவற்றைத் தாண்டி மக்களுக்கு சிறந்த பலனைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய விதத்தில் இந்த அபிவிருத்திப் பணிகளை எவ்வாறு முன்னெடுக்கவேண்டும் என்பது பற்றியும் இங்கு விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

குறிப்பாக வடக்கு, கிழக்குப் பிரதேசங்களின் நில விடுவிப்பு, பாதைகள் மற்றும் பாடசாலைகள் விடுவிப்பு, ஆனையிறவு உப்பளம், குறிஞ்சைத்தீவு உப்பளம், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, முல்லைத்தீவு ஓட்டுத் தொழிற்சாலை, வடக்கு, கிழக்குப் பிரதேசங்களின் குடிதண்ணீர் வசதிகளை ஏற்படுத்துவதற்கான செயற்திட்டங்கள், படையினரால் நடத்தப்படும் முன்பள்ளிகளின் சமூகத் தாக்கங்கள், கேப்பாப்பிலவு காணி விவகாரம், வட்டகச்சி விவசாயப் பண்ணை விடுவிப்பு, ஒலுவில் மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட மேலும் பல முக்கிய விடயங்கள் பற்றி இதன்போது விரிவாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், அத்துறை சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன், எஸ்.சிறிதரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, கவீந்திரன் கோடீஸ்வரன், அங்கஜன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்தா, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் வடக்கு, கிழக்கில் காணப்படும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பற்றியும் அதன்போது எழுகின்ற தடைகள் பற்றியும் விரிவாகச் சுட்டிக்காட்டினார்கள்.

அந்தக் கருத்துக்களை மிகுந்த ஆர்வத்துடன் செவிமடுத்த ஜனாதிபதி, இனங்காணப்பட்டிருக்கின்ற பிரச்சினைகளுக்குச் சிறந்த தீர்வுகளைப் பெற்றுத் தரக்கூடிய வகையில் அவற்றை புதிய அமைச்சரவையின் கவனத்துக்குக் கொண்டு வருவதாகவும், 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் கீழ் தேவையான நிதி ஒதுக்கீட்டைச் செய்வதாகவும் தெரிவித்ததுடன், தனியார் முதலீட்டாளர்கள் மூலமாகவோ அல்லது அரச -தனியார் கூட்டு முதலீட்டு மூலமாகவோ தற்போது வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் செயலிழந்திருக்கும் தொழிற்சாலைகளை மீண்டும் இயங்க வைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அத்தோடு தனியாருக்குச் சொந்தமான காணிகளில் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாயச் செயற்பாடுகள் மேலும் தொடரப்படுவதை அனுமதிக்க முடியாது என்பதால் அத்தகைய காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, யாழ். இராணுவ கட்டளைத் தளபதி தர்ஷன ஹெட்டியாரச்சி, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்ன, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர் – என்றுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *