ஜனநாயகப் பாதையில் கூட்டமைப்பு; இதனால் தோல்வி கண்டார் மஹிந்த! – ஸ்ரீநேசன் எம்.பி. தெரிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயகத்தின் பாதையில் சென்றதாலேயே மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சித்தாண்டியில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக் கிளை புனரமைப்பது தொடர்பான கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க முடியாது என சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் எமக்குக் கெளரவம் இருந்தது. இந்தக் கெளரவத்தைக் கெடுக்கும் வகையில் ஒருவர் சென்றுவிட்டார். அவர் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து புதிய அரசுடன் இணைந்து செயற்படவுள்ள குழுவினருடன் வருவதற்குப்
பேச்சு இடம்பெறுவதாக அறியமுடிகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தங்கேஸ்வரி, பியசேன போன்றவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து பின்னர் தேர்தலில் தோல்வியைச் சந்தித்திருந்தனர். அதேபோன்று தற்போது வியாழேந்திரன் சென்றுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் காலத்திலேயே பெரும்பாலான எமது மக்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டனர். இதன் காரணமாக மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதற்கு இடமளிக்கக்கூடாது எனக் குறிப்பாக வன்னிப் பிரதேசத்திலிருந்து பல குரல்கள் வந்தன. அதன் அடிப்படையில் நாங்கள் ஐக்கிய தேசியக்
கட்சிக்கு ஆதரவு வழங்கினோம்.

யார் வெல்வது என்பது முக்கியமல்ல, யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே எமக்கு முக்கியம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *