வேண்டா வெறுப்புடன் மைத்திரி! ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடந்தது என்ன?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல், 11.16 மணியளவில் எளிமையாக நடந்த நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்பாக, ரணில் விக்கிரமசிங்க, புதிய பிரதமராக பதவியேற்றிருந்தார்.

மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி

இந்த நிகழ்வில், ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐதேகவின் 4 மூத்த தலைவர்கள் மாத்திரம் பங்கேற்பர் என்று ஐ.தே.க. பொதுச்செயலர் அகிலவிராஜ் காரியவசம் கூறியிருந்தார்.

நிகழ்வில் பங்கேற்க 5 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம், அதிபர் செயலகம் அனுமதி அளித்திருந்தது. எனினும், பின்னர் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

நிகழ்வுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி செயலகத்தைச் சென்றடைந்திருந்தார். எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடைசி நேரமே அங்கு வந்து சேர்ந்தார்.

ஊடகங்களுக்கு கதவடைப்பு

நிகழ்வைப் படம் பிடிப்பதற்கோ, செய்திகளை சேகரிப்பதற்கோ ஊடகங்களுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

நிகழ்வில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் மாத்திரமே படங்கள் வெளியிடப்பட்டன.

ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை குறித்து பி.பி.சிக்கு கருத்து வெளியிட்ட ஐ.தே.க. பொதுச்செயலர் அகிலவிராஜ் காரியவசம், ஜனநாயகத்துக்கான போர் இன்னும் முடியவில்லை என்று தெரிவித்தார்.

மைத்திரியின் குத்தல் பேச்சு

பதவியேற்புக்குப் பின்னர், ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட கருத்துக்களும், நிகழ்வில் சலசலப்பை ஏற்படுத்தியது. சுமார் 40 நிமிடங்கள் ஜனாதிபதி இங்கு உரையாற்றியிருந்தார்.

ரணில் விக்கிரமசிங்க முன்னர் பதவியில் இருந்த போது, மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் படை அதிகாரிகள், பௌத்த பிக்குகளை சிறையில் அடைத்தது போன்றவற்றை ஜனாதிபதி சுட்டிக்காட்டி குற்றம் சுமத்தியிருந்தார்.

இருந்தபோதும், நாட்டில் குழப்பத்தை தீர்க்கவே மீண்டும் பிரதமராக ரணிலை நியமித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரி உரையாற்றியபோது, அவரது முகத்தில் கோபமும், கவலையும் தென்பட்டது. புன்சிரிப்பு இன்றி அவர் உரையாற்றினார்.

சஜித் பதிலடி

இதனையடுத்து, ஐ.தே.கவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதிக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டார். இதனால் நிகழ்வில் சற்று குழப்பமான சூழல் ஏற்பட்டது. எனினும், ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் பிரமுகர்கள் ஜனாதிபதியுடன் கைலாகு கொடுத்து விடை பெற்றனர்.

பதவியேற்பை வெளிப்படுத்திய ருவிட்டர் பதிவு

ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்ற செய்தி முதலில் ருவிட்டர் பதிவு மூலமே, ஊடகங்களுக்கும் நாட்டு மக்களுக்கும் தெரியவந்தது.

நிகழ்வில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தனது ருவிட்டர் பதிவில் பதவியேற்பு படத்துடன், செய்தியை வெளியிட்டிருந்தார்.

பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது என்பதை உறுதிப்படுத்திய முதலாவது செய்தியாக அதுவே அமைந்தது.

90 நிமிடங்கள் கழித்து
உத்தியோகபூர்வ அறிவிப்பு

ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று ஒன்றரை மணிநேரத்துக்குப் பின்னரே, ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கை மூலம் உறுதி செய்யப்பட்டது.

அதில், புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார் என்று மாத்திரம் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிரதமரின் செயலராக
மீண்டும் சமன்

பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்ட பின்னர், பிரதமரின் செயலராக மீண்டும் சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

கடந்த ஒக்ரோபர் 26ஆம் திகதி, மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், சமன் ஏக்கநாயக்க பிரதமரின் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இவர் இலங்கை நிர்வாக சேவையின் விசேட நிலை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் மறைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பேஸ்புக் மற்றும் ருவிட்டர் பக்கங்களில், ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பு தொடர்பான செய்தியோ, படங்களோ இன்று நள்ளிரவு வரை பதிவிடப்படவில்லை.

அதேவேளை, பதவியேற்புக்குப் பின்னர், பிரதமர் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஜனாதிபதி மைத்திரி நிகழ்த்திய உரை அடங்கிய காணொளி இன்று மாலை ஜனாதிபதியின் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *