கூட்டமைப்புக்குக் கோடி நன்றி! தமிழ் மக்களுக்குத் தீர்வு உறுதி!! – ரணிலின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என சஜித் திட்டவட்டம்

“எதேச்சதிகாரத்துக்கு எதிரான எமது ஜனநாயகப் போராட்டம் நீதித்துறையின் ஊடாக வென்றுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் அரியணை ஏறுகின்றது. இதற்கு ஒத்துழைத்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாம் மறந்திடலாகாது. அவர்களுக்குக் கோடான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றியமைக்கமைய ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறியவுடன் புதிய அரசமைப்பைக் கொண்டு வந்தே தீரும். இனப்பிரச்சினையால் – ஆயுதப் போராட்டத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை வழங்கியே தீரும். அந்தத் தீர்வு நாட்டின் மூவின மக்களும் ஏற்கும் தீர்வாக அமையும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றின் இலங்கை செய்தியாளருக்கு அளித்த பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சி நடவடிக்கையால் அதிகாரத்துக்கு வந்தவர்கள் அதியுயர் சபையான நாடாளுமன்றத்தின் தீர்மானங்களை உதறி எறிந்துவிட்டு அராஜகம் புரிந்தார்கள். நீதிமன்றத்துக்கும் சவால் விடும் வகையில் அவர்கள் செயற்பட்டார்கள். ஆனால், மேன்முறையீட்டு நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் இவர்களுக்கு உரிய பாடம் புகட்டித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதிகார வெறி பிடித்தவர்களில் முக்கிய புள்ளியாக இருந்தவர் தனக்கு ஏற்பட்ட அவமானத்தையடுத்து பதவியைத் துறந்துள்ளார். இனிமேலாவது இவர்கள் திருந்தி நடக்க வேண்டும்.

அரச அதிகாரத்தை பலவந்தமாக கைப்பற்றியதும் எதிர்த்தரப்பு அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டது போன்று நாங்கள் தாக்குதல் நடத்தப்போவதில்லை. அரசமைப்பை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்பதே தீர்ப்புக்கள் மூலம் கூறப்பட்டுள்ளது.

நாங்கள் நாட்டின் தற்காலிகப் பொறுப்பாளர்கள். ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலின்போது எவரும் மாறலாம். நாம் சிறந்த முன்மாதிரியான அரசாகப் பயணிக்கத் தீர்மானித்துள்ளோம். இடம்பெற்ற தவறுகளைப் புரிந்து கொண்டு சரியான பாதையில் பயணிக்கவுள்ளோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *