அந்நியத் தலையீடுகளை முறியடிக்க அணிதிரள்க! – நாட்டு மக்களை அழைக்கிறார் மைத்திரி

“வரலாற்று காலங்களில் எமது நாடு முகங்கொடுக்க நேர்ந்த படையெடுப்புகளைவிட முற்றிலும் வேறுபட்ட அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது எமது நாட்டின் மீது செலுத்தப்படுகின்றது. அத்தகைய சவால்களை முறியடிக்க அனைவரும் அணிதிரளவேண்டும்.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தாய் நாட்டின் எதிர்கால நன்மை கருதி அரசியல் கட்சி வேறுபாடின்றி சகலரும் தமது கடமைகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தியத்தலாவை இராணுவ கல்வியியல் கல்லூரியின் 93ஆவதுபயிற்சி நிறைவு விழாவில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் ஜனாதிபதியின் முதலாவது உரை இதுவாகும்.

இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

“நாட்டில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பலப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நிறைவேற்ற நான் தயாராக உள்ளேன்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்புகளையும் தற்போது தாய் நாட்டுக்கு எதிராகக் காணப்படும் சவால்கள் தொடர்பிலும் பாதுகாப்புத் துறை விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசிய மாகும்.

வரலாற்றுக் காலங்களில் எமது நாடு முகங்கொடுக்க நேர்ந்த படையெடுப்புகளை விட முற்றிலும் வேறுபட்ட அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது எமது நாட்டின் மீது செலுத்தப்படுகின்றது.

அத்தகைய சவால்களைக் கண்டறிந்து தாய் நாட்டின் எதிர்காலத்துக்காக ஆற்ற வேண்டிய பணிகளை அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துப் பிரஜைகளும் அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *