பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது தமிழ்க் கூட்டமைப்பு!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளதால்,  பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழக்கவேண்டியநிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் ஆசனங்களைப்பெறும் கட்சியே ஆட்சியமைப்பதற்குரிய ஆணையைப் பெறும். அதற்கு அடுத்தபடியான ஆசனங்களைக் கைப்பற்றும் கட்சிக்கே பிரதான எதிர்க்கட்சிப் பதவி கிடைக்கும். அந்தக் கட்சியின் தலைவரே எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவுசெய்யப்படுவார்.

2017ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 45.66 சதவீத வாக்குகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களையும், மஹிந்த தலைமையில் களமிறங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 42.38 சதவீத வாக்குகளுடன் 95 ஆசனங்களையும் கைப்பற்றின.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களையும், ஜே.வி.பி. 6 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. ஆகியன தலா ஓர் ஆசனம் வீதம் கைப்பற்றின. மேற்படி 6 கட்சிகளே நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளாகும்.

தேர்தலில் தனியாட்சி அமைப்பதற்குரிய பெரும்பான்மையை எந்தவொரு கட்சியும் பெற்றிருக்கவில்லை. இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தொகுதி எம்.பிக்களின் உதவியுடன் ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அரசை அமைத்தது. சுதந்திரக் கட்சிலுள்ள மஹிந்தவுக்குச் சார்பான 53 எம்.பிக்கள் எதிரணி வரிசையில் அமர்ந்தனர்.

அத்துடன், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமது அணிக்கே வழங்கவேண்டும் என்றும் மஹிந்த அணி வலியுறுத்தி வந்தது. இதற்காக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. எனினும், நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு பிரதான கட்சிகளும் இணைந்துவிட்டதால் அதற்கு அடுத்தபடியாக கூடுதல் ஆசனங்களைப் பெற்ற கட்சிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படும் என்று சபாநாயகர் தீர்ப்பளித்திருந்தார்.

இதன்பிரகாரம் 16 ஆசனங்களைக் கைப்பற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணக்கப்பாட்டுடன் எதிர்க்கட்சி பிரதம கொறடா பதவி ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டது.இந்நிலையில்,  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிரிக்கு செல்வதால், எ மேற்படி இரு பதவிகளையும் அக்கட்சி கைப்பற்றிவிடும். எனினும், சுதந்திரக்கட்சி தேசிய அரசுக்கு, உத்தியோகபூர்வமாக ஆதரவளிக்கும் பட்சத்தில் பழையை நிலைமையே நீடிக்கும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *