பொதுத் தேர்தல் இல்லையெனில் எனக்கு எதற்குப் பிரதமர் கதிரை? – பதவியை இராஜிநாமா செய்த பின் மஹிந்த விசேட அறிக்கை

“நாடாளுமன்றத் தேர்தல் ஒன்று இல்லாமல் பிரதமர் பதவியில் இருக்கும் தேவை எனக்கில்லை. எனவே, ஜனாதிபதி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு வசதியாகவே நான் பிரதமர் பதவியை இராஜிநாமா செய்கின்றேன்.”

– இவ்வாறு தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி.

தனது பதவி விலகல் குறித்து ஊடகங்களுக்கு இன்று நண்பகல் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் மக்களுக்குப் பொதுத் தேர்தல் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதே எமது இலக்காக இருந்தது.

பொதுத் தேர்தல் இன்றி பிரதமராக பதவி வகிக்கும் எதிர்பார்ப்பு இல்லை என்பதாலும் தீர்மானங்கள் எடுக்கும்போது ஜனாதிபதிக்கு இடையூறு ஏற்படாதிருப்பதற்கும்தான் பிரதமர் பதவியில் இருந்து விலகி புதிய அரசு ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதிக்கு வழிவிடுகின்றேன்.

மக்கள் எதிர்பார்த்துள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், அந்த மாற்றத்தை கட்டாயம் ஏற்படுத்துவோம்.

எதிர்வரும் நாட்களில் எமது பிரதான இலக்காக இருப்பது, ஒரு வருடமும் மூன்று மாதங்களாலும் தாமதமடைந்துள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே ஆகும்.

தேர்தல் இன்றி முன்னோக்கிச் செல்லும் வேலைத்திட்டமே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.

மாகாண சபைத் தேர்தலை பிற்போட்டிருப்பது போன்று எல்லை நிர்ணய பிரச்சினையை ஏற்படுத்தி 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலையும் பிற்போடுவதற்கே அவர்கள் திட்டமிட்டிருக்கின்றார்கள்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *