பாதாளக்கோஷ்டிக்கு துப்பாக்கி சன்னங்களை வழங்கிய இராணுவ மேஜருக்கு மறியல்

பாதாள உலகத்தைச் சேர்ந்த மூவருக்கு, இரானுவ முகாமிலிருந்து துப்பாக்கிகள் மற்றும் ரிவோல்வர்களுக்கு பயன்படுத்தப்படும் பெருந்தொகையிலான சன்னங்களை வழங்கிய இராணுவ மேஜரான கட்டளை அதிகாரியை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சியாம்பலாண்டுவை மஜிஸ்ரேட் நீதிபதி நிலந்த விமலரட்ண முன்னிலையில், இன்று இராணுவ மேஜரான கட்டளை அதிகாரியை, சியாம்பலாண்டுவை பொலிஸார் ஆஜர் செய்திருந்தனர். அவ்வேளையில், நீதிபதி அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சியாம்பலாண்டுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து, பொலிஸார் குறிப்பிட்ட இடமான தொம்பகாவெலயின் ஆடம்பர வீடொன்றினை சுற்றி வலைத்து, தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர்.

அவ்வேளையில், பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்பட்ட மூவரைக் கைது செய்திருந்தனர். அவர்களின் உடைப்பைகளை சோதனையிட்ட பொலிஸார், டீ 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 2997 சன்னங்களையும், 3.8 மில்லி மீற்றர்களைக் கொண்ட ரிவோல்வர்;களுக்கு பயன்படுத்தப்படும் 32 சன்னங்களையும் கண்டுபிடித்து மீட்டனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, இப்பெருந்தொகையான சன்னங்களை, இராணுவ மேஜரான கட்டளை அதிகாரியிடம் தாம் பெற்றதாகக் கூறியதை அடுத்து, இராணுவ மேஜரான கட்டளை அதிகாரி கைது செய்யப்பட்டு, நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு, விளக்கமறியில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மூவர் ஏற்கனவே சியம்பலாண்டுவை மஜிஸ்ரேட் நீதிபதி நிலந்த விமலரட்ன முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட வேளையில், அவர்களை தடுத்து வைத்து விசாரனை செய்ய, பொலிஸாருக்கு அனுமதி வழங்கியதோடு, எதிர்வரும் 26ம் திகதி சியம்பலாண்டுவை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும், நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

குறிப்பிட்ட மூவரை, தடுத்து வைத்த விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது, அம் மூவரும் நாட்டின் பல பொலிஸ் நிலையங்களில் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளிகள் என்றும், இவர்கள் பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்து;ளது.

சியம்பலாண்டுவைப் பொலிஸார், தொடர்ந்தும் தீவிர புலன்விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பதுளை நிருபர்

செல்வராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *