மலையகத்தில் கருப்பாடுகளை களையெடுக்க வேண்டும்! – வேலுகுமார் வலியுறுத்து

மலையகத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை ஒழிப்பதற்காக – குறைப்பதற்காக திட்டமிட்ட அடிப்படையில் பேரினவாதிகளால் அரசியல் கைக்கூலிகள் சிலர் களமிறக்கப்பட்டுள்ளனர். எனவே, பேரினவாதிகளின் இந்த துரோக அரசியலுக்கு துணைபோகும் கைக்கூலிகள், கருப்பாடுகள் தொடர்பில் மக்கள் விழிப்பாகவே இருக்கவேண்டும்- என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட எம்.பியுமான வேலுகுமார் கோரிக்கை விடுத்தார்.

கண்டி, கலஹா பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

‘’ மலையகத்தில்வாழும் தமிழ் மக்களை அடக்கியாள்வதற்கு ஒரு கூட்டம் கங்கணம் கட்டிசெயற்பட்டுவருகிறது. இந்த இலக்கை வெற்றிகரமாக அடையவேண்டுமானால் முதலில் எம்மக்களை அரசியல் ரீதியில் அநாதைகளாக்கவேண்டும். இதன் ஓர் அங்கமாகத்தான் தமிழ் வாக்குகளை சிதறடித்து, தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பல்வேறு குழுக்களை பேரினவாதிகள் உரமூட்டி வளர்த்துவருகின்றனர்.

இந்த சூழ்ச்சி – கபட அரசியலின் ஆபத்தை, ஆழத்தை பகுத்தறியாது, பிறப்பால் மட்டுமே தமிழரான சிலர் , அற்பசொற்ப சலுகைகளுக்காக அரசியல் கைக்கூலிகளாக மாறியுள்ளமை கவலைக்குரிய விடயமாகும். சந்தர்ப்ப அரசியலுக்காகவே தம்மை பேரினவாதிகள் பயன்படுத்துகின்றனர் என்பதைகூட புரிந்துகொள்ளமுடியாத நிலையிலேயே இவர்களின் ஆறாம் அறிவு இயங்குகின்றது.

மலையகத்தில் ஏற்படும் தன்னிச்சையான எழுச்சியை நாம் வரவேற்கின்றோம். ஆனால், கபடநோக்கத்தோடு கட்டியெழுப்படும் எழுச்சியை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆதரிக்கமாட்டோம். ஆகவே, தற்புகழுக்காக – குறுகிய இலாபத்துக்காக இந்த நயவஞ்சக வலையில் சிக்கவேண்டாம் என மலையக இளைஞர்களிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ் முற்போக்கு கூட்டணி உதயமான பின்னர், மலையகத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 19 வருடங்களுக்கு பிறகு கண்டி மண்ணில் தமிழ் எம்.பியொருவரை வென்றெடுத்தோம். இரத்தினபுரி, கம்பஹா  ஆகிய மாவட்டங்களில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கான அரசியல் அடித்தளத்தை இட்டுள்ளோம். உள்ளாட்சிசபை, மாகாணசபை, பாராளுமன்றம் என அனைத்திலும் பிரதிநிதிததுவம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதை  இல்லாதொழிக்க – குறைக்கவேண்டும் என்பதே பேரினவாதிகளின் , மலையக மக்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்த முற்படும் தரப்புகளின் இலக்காக இருக்கின்றது. ஆகவே, இது விடயத்தில் எம்மக்கள் விழிப்பாகவே இருக்கவேண்டும். வார்த்தை ஜாலங்கள், நடிப்பு அரசியலுக்கு மயங்கி, உரிமை அரசியலை இழந்துவிடக்கூடாது’’ என்றார் வேலுகுமார் எம்.பி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *