இராஜதந்திர அரசியலையே நாங்கள் பின்பற்றுகின்றோம்! – கூட்டமைப்பு எம்.பி. சிறிதரன் தெரிவிப்பு

“அரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாங்கள் பின்பற்றுகின்றோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிங்களக் குடியேற்றம் தொடர்பில் அந்தந்தக் காலங்களில் இருந்த ஆட்சியாளர்களிடம் தொடர்ந்தும் வினவப்பட்டது. மைத்திரி – ரணிலுக்கு வழங்கப்பட்ட ஆதரவின் ஊடாக சிங்களக் குடியேற்றத்தை நிறுத்தினோம்.

அரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலை நாம் பின்பற்றுகின்றோம். அரசின் செயற்பாடுகளை விமர்சித்துக்கொண்டுதான் உள்ளோம். அரசினால் பல விடயங்கள் நிறைவேற்றப்படவேண்டியுள்ளன. அரசு அதைச் செய்யத் தவறினால் அதற்கு மாற்று விடயங்களைக் கையாளக்கூடிய விடயங்கள் எம்மிடம் உள்ளன.

நாம் மக்கள் நலன் சார்ந்தே இவ்வாறு செயற்பட்டோம். இதன்மூலம் பல விடயங்களைச் சாதிக்கலாம் என எண்ணியே நாம் ஆதரவளித்துள்ளோம்.

கடந்த காலங்களில் நாம் தனியே ரணில் விக்கிரமசிங்கவை மாத்திரம் ஆதரித்திருக்கவில்லை. மைத்திரிபால சிறிசேனவையையும் நாம் ஆதரித்திருந்தோம். அவருக்கான ஒத்தாசை பலவற்றையும் வழங்கியிருந்தோம்.

மக்களின் அபிலாஷைகளுக்கான தீர்வு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், இராணுவத்திடம் உள்ள காணிகளை உடன் விடுவித்தல் உள்ளிட்ட விடயங்களில் நாம் தெளிவாக உள்ளோம். அதை அடைவதற்கு நாம் முழுமையாகச் செயற்படுவோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *