சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு நீதிமன்று அடுத்தடுத்து சூடுவைப்பு! – மகிழ்ச்சியின் உச்சத்தில் சம்பந்தன்

“இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியிலிருந்து அரசமைப்புக்கு முரணாக இடம்பெற்றுவந்த சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் அடுத்தடுத்து தக்க பாடம் புகட்டி தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இதனை நாம் வரவேற்கின்றோம். வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளினால் பெருமகிழ்வு அடைகின்றோம்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

“அதிகாரத்தில் இருப்பவர்கள் இனிமேலாவது திருந்தி நாட்டு மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயற்பட வேண்டும். நாட்டின் நற்பெயரைக் காப்பாற்ற வேண்டும். இது ஜனநாயக நாடு என்பதை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும். நிரந்தரத் தீர்வுடன் மூவின மக்களும் ஒற்றுமையாக – நல்லிணக்கத்துடன் வாழும் சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்” – என்று அவர் மேலும் கூறினார்.

உடல்நலக் குறைவால் நேற்று வியாழக்கிழமை காலை கொழும்பிலுள்ள ‘லங்கா’ (அப்பலோ) தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அங்கிருந்தவாறு இதனைக் கூறினார்.

நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அரசமைப்புக்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் நேற்று மாலை தீர்ப்பளித்தது. அதையடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவையின் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீக்குவதற்கும் உயர்நீதிமன்றம் இன்று மாலை மறுப்புத் தெரிவித்தது. இவை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *