சிங்கப்பூரில் ஒரு டொலர் இலஞ்சம்: இருவருக்கு ஐந்து வருடங்கள் சிறை!

சிங்கப்பூரில் ஒரு டொலர் இலஞ்சம் பெற்ற இருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சட்டம், ஒழுங்கை முறையாகப் பராமரிக்கும் நாடு. இலஞ்ச லாவண்யங்கள் இல்லாமல் மக்கள் நலனை மட்டுமே பேணி செயல்படும் அரசு இங்கு செயற்படுகிறது. உபரி பட்ஜட் போட்டால் எஞ்சியதை மக்களுக்குப் பகிர்ந்து அளித்துவிடும் நாடு. உலகிலேயே 6ஆவது ஊழல் குறைந்த நாடு சிங்கப்பூர் ஆகும். தனியார்த்துறை, பொதுத்துறை நிறுவனங்களில் லஞ்சம் பெற்றால் கடும் தண்டனை வழங்கப்படும். அந்த வகையில், ஒரு சிங்கப்பூர் டொலர் லஞ்சம் வாங்கிய சீன நாட்டைச் சேர்ந்த இருவர் இப்போது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சீன நாட்டைச் சேர்ந்த ஜெங் ஜிலியாங் (வயது 47), சாவ் யூசுன் (வயது 43) ஆகிய இருவரும் சிங்கப்பூரில் கண்டெய்னர் சரக்குப் பெட்டகம் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். ஃபோர்க் லிஃப்ட் எனப்படும் சரக்கு ஏற்றும் மெஷினைக்கொண்டு கண்டெய்னர்களில் பொருட்களை நிரப்புவதே இவர்களின் பணி. கண்டெய்னர்களை தாமதமில்லாமல் விரைவில் நிரப்பி அனுப்புவதற்காக ட்ரெக் டிரைவர் ஒருவரிடம் ஒரு சிங்கப்பூர் டொலர் (ரூ.52) இலஞ்சம் பெற்றுள்ளனர். குற்றச்சாட்டு குறித்து, சிங்கப்பூர் ஊழல் எதிர்ப்புப் பிரிவு விசாரணை நடத்தி வந்தது. விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையடுத்து, இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு, ஒரு இலட்சம் சிங்கப்பூர் டொலர்களும் அபராதம் விதிக்கப்பட்டது.

“சிங்கப்பூரில் பணி புரிபவர்கள் சம்பளத்தைத் தவிர வேறு எந்த ஆதாயத்தையும் பெறக் கூடாது. பணியில் உண்மையும் நேர்மையும் அவசியம். இலஞ்சமாகப் பெற்றது ஒரு டொலர் என்பது விடயம் அல்ல. ஒரு டொலரோ ஆயிரம் டொலரோ இலஞ்சம் இலஞ்சம்தான். சிங்கப்பூரில் இலஞ்சம் எந்த உருவில் இருந்தாலும் தண்டனை உறுதி” என்று சிங்கப்பூர் இலஞ்ச ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிபட்டது ஒரு டொலருக்காக என்றாலும் இவர்கள் இதேபோன்று பல டிரைவர்களிடம் இலஞ்சம் பெற்றிருக்கலாம் என்று இலஞ்சம் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *