நம்பிக்கையின் அடிப்படையிலேயே ரணிலை ஆதரித்தது கூட்டமைப்பு! – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

“நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை மீட்பதற்காக மட்டுமே ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்தது. அப்படி ஆதரவு வழங்குவதற்காக எழுத்து மூல உறுதிமொழிகள் எதனையும் அவரிடம் நாம் பெறவில்லை. நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவருக்கு வாக்களித்தோம்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத் தரணி எம்.ஏ.சுமந்திரன்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்ற ஜனநாயகத்தை மீட்பதற்காக – காப்பதற்காக மட்டுமே ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் ஆதரவு கொடுக்க முன்வந்தோம். அதில் வேறு விடயங்கள் இல்லை. அது குறித்து ஏலவே நாங்கள் விரிவாக எமது மக்களுக்குத் தெளிவுபடுத்தியிருக்கின்றோம்.

ஜனநாயக விரோத முறையில் அதிகாரத்துக்கு வந்த ராஜபக்ஷ தரப்பை வீட்டுக்கு அனுப்பி ஜனநாயகத்தை மீட்பதற்காகவே இந்த நாடாளுமன்ற நடவடிக்கையை நாம் முன்னெடுத்தோம். வேறு காரணங்கள் ஏதுமில்லை.

ஆனால், ரணிலுக்கு தமிழ் மக்கள் உடனடிப் பிரச்சினைகள், நெருக்கடிகள், நீண்டகால அடிப்படையிலான நிரந்தரத் தீர்வு ஆகியவை குறித்தெல்லாம் ஆழ்ந்த கரிசனை உண்டு என்பது எமக்கு நன்கு தெரியும். செய்யக் கூடியவற்றை அவர் செய்வார் என்று நாங்கள் நம்பலாம். நம்புகின்றோம். எதிர்பார்க்கின்றோம்.

நாட்டில் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் விடயத்தில் சிறுபான்மை மக்களின் அரசியல் தலைமைகள் உறுதியாகவும், கரிசனையோடும், பிரக்ஞையுடனும் உள்ளன. அதன் வெளிப்பாடே நேற்றுப் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கைத் தீர்மானம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *