ஐ.தே.கவிடம் தமிழ்க் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் என்ன? – சாந்தி எம்.பி. விளக்கம்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ்த் தேசியத் கூட்டமைப்பு சர்வதேச விசாரணை, அரசியல் கைதிகள் விடுதலை உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்தது எனக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைப்பு இரகசிய ஒப்பந்தம் செய்து தமிழீழத்தை அடையப்போவதாக மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியுடன் அரசமைப்பு நிறைவேற்றம், நிலைமறுகால நீதிப் பொறிமுறை, சர்வதேச விசாரணை, காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை எனப் பல்வேறு தரப்பட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது அவர்கள் அவற்றைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர்” – என்றார்.

மூன்று வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வழங்கிய கோரிக்கைகள் சில இன்னும் நிறைவேற்றபடாமல் இருக்கின்றன. இந்நிலையில், ஐ.தே.கவின் வாக்குறுதியை எப்படி நம்புவது என சாந்தி எம்.பியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “அதற்கான ஒரு பொறிமுறை தற்போது வகுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்வின் போதும் எங்களால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளில் முன்னேற்றம் இருக்கின்றதா, அது நிறைவேற்றப்பட்டுள்ளதா, அதில் இருக்கும் தடைகள் என்ன என்பது தொடர்பில் அதற்கான விசேட குழு அமைக்கப்பட்டு அதனை மீளாய்வு செய்வது என்று சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *