ரணிலுடன் ஒப்பந்தம் என்று வெளியான ஆவணம் பொய்! – அப்படி எதுவும் செய்யவில்லை என்கிறார் சம்பந்தன்

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நான் ஒப்பந்தம் செய்துள்ளேன் எனக் கூறி வெளியாகியுள்ள ஆவணம் பொய்யானது. நான் ரணிலுடன் ஒப்பந்தம் எதிலுமே கைச்சாத்திடவில்லை.”

– இவ்வாறு அறிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் எனக் கூறி முற்றுமுழுதாகச் சிங்களத்தில் அமைந்த ஆவணம் ஒன்று சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் வெளியிடப்பட்டிருந்தது. அதில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கையொப்பங்களும் இருந்தன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அரசியல் கைதிகள் விடுதலை, போர்க்குற்ற விசாரணை, படையினர் வெளியேற்றம், வடக்கு – கிழக்கு இணைப்பு, ஜெனிவாத் தீர்மானம் நடைமுறைப்படுத்தல் உட்படப் பல விடயங்கள் அந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே நாடாளுமன்றில் ரணில் மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு கூட்டமைப்பு ஆதரவு அளித்தது என்றும் தகவல்கள் பரப்பப்பட்டன.

இது தொடர்பில் தெளிவுபடுத்தி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகிய நானும் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளதாக ஆவணம் ஒன்று வெளிவந்துள்ளதாக அறியமுடிகின்றது. நான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரோடு எவ்வித ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை. இந்த ஆவணம் வேண்டுமென்றே உண்மைக்குப் புறம்பாக வெளியிடப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” -என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *