யாழ். மாநகர சபையின் ‘பட்ஜட்’ வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்! – கூட்டமைப்பு, முன்னணி ஆதரவு; ஈ.பி.டி.பி. எதிர்ப்பு

யாழ். மாநகர சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நேற்று நிறைவேற்றப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் பட்ஜட்டை வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்ற ஒப்புதலளித்தனர். எனினும், ஈ.பி.டி.பியின் 9 உறுப்பினர்களும் எதிர்ப்பு வெளியிட்டனர். சபையின் அதிகப்படியான உறுப்பினர்களின் முடிவுக்கமைய வாக்கெடுப்பு இன்றியே பட்ஜட் நிறைவேற்றப்பட்டது.

யாழ். மாநகர சபையின் 3ஆவது விசேட பொதுக்கூட்டம் நேற்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மாநகர சபா மண்டபத்தில் மாநகர மேயர் இம்மானுவல் ஆனோல்ட் தலைமையில் நடைபெற்றது.

2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜட் தொடர்பில் கடந்த அமர்வில் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள், திருத்தங்களுடன் சபையில் மேயரால் பட்ஜட் முன்வைக்கப்பட்டது.

நேற்று முன்வைக்கப்பட்ட பட்ஜட்டில் சில திருத்தங்கள் மற்றும் வகை மாற்றங்கள் உறுப்பினர்கள் சிலரால் முன்வைக்கப்பட்டன. வகை மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, வாக்கெடுப்பு பட்ஜட் நிறைவேற்றப்பட்டது.

“யாழ்ப்பாண மாநகர சபையின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை உள்ளடக்கிய 2019ஆம் ஆண்டுக்கான பட்ஜட் முற்றுமுழுதான ஜனநாயக முறையில் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து உறுப்பினர்களினதும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது” என்று மேயர் இமானுவேல் ஆனோல்ட் அனுப்பிவைத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *