மீண்டும் பலத்தைக் காட்டினார் ரணில் ! மைத்திரி -மஹிந்த கூட்டணிக்கு 6 ஆவது தடவையும் தோல்வி!! 117 வாக்குகளுடன் நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றம்!!!

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எம்.பியை பிரதமராக நியமிக்குமாறுகோரி – அவர்மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை ( 12) 117 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ரணிலுக்கு நேசக்கரம் நீட்டும் வகையில் பிரேரணைய ஆதரித்து வாக்களித்தது. ஜே.வி.பி. எம்.பிக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது நம்பிக்கையை தெரிவிக்கும் பிரேரணையை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச அவையில் முன்வைத்தார்.

ரவிகருணாநாயக்க, அகிலவிராஜ் காரியவசம், லக்ஸ்மன் கிரியல்ல. ராஜித சேனாரட்ன, பழனி திகாம்பரம், மங்கள சமரவீர, சஜித் பிரேமதாஸ ஆகியோரால் கொண்டவரப்பட்ட பிரேரணையில்,

” நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அமைச்சராகச் செயற்படுவதற்கு நாடாளுமன்றத்தின் அதிக நம்பிக்கை அவர்மீதுண்டென இத்தால் இச்சபை பிரேரணை நிறைவேற்றுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச, ரவிகருணாநாயக்க, மங்கள சமரவீர, மாவைசேனாதிராஜா, அநுரகுமார திஸாநாயக்க, ஜயந்த கருணாதிலக்க ஆகிய எம்.பிக்களின் உரைகள் முடிவடைந்தப்பின்னர், வாக்கெடுப்புக்குரிய அழைப்பை சபாநாயகர்விடுத்தார். இலத்திரனியல் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, 117 வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிராக ஒருவாக்குகூட அளிக்கப்படவில்லை.மஹிந்த – மைத்திரி கூட்டணி எம்.பிக்கள் சபை அமர்வை புறக்கணித்திருந்தனர்.

  1. மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை.
  2. மஹிந்தவின் உரைமீது வாக்கெடுப்பு.
  3. இரண்டாவது முறையும் நம்பிக்கையில்லாப் பிரேரணை.
  4. பிரதமர் செயலகத்துக்கான நிதியை முடக்கும் பிரேரணை.
  5. அமைச்சுகளுக்கான நிதியை முடக்கும் பிரேரணை. மேற்படி ஐந்து பிரேரணைகயும் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசு நிறைவேற்றியுள்ளது. தற்போது 6 ஆவது பிரேரணையும்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *