போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுதல் அவசியம்! – ரணிலிடம் நேரில் வலியுறுத்தியது கூட்டமைப்பு

இறுதிப் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்படல் உள்ளிட்ட விடயங்களை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனைகளாக முன்வைத்தது.

கடந்த நவம்பர் மாதம் 29ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவுடனும், 30ஆம் திகதி மைத்திரிபால சிறிசேனவுடனும் கூட்டமைப்பு சந்திப்புக்களை நடத்தியிருந்தது. இந்தச் சந்திப்புக்களில் போர்க்குற்ற விசாரணை பற்றி கூட்டமைப்பு எதையும் பேசவில்லை என்று செய்தி வெளியாகியிருந்தது. இது தொடர்பில் சமூக ஊடகமான முகநூலில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ரணிலுடனான சந்திப்பில் அந்த விடயம் பேசப்பட்டது என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். பொறுப்புக்கூறல் பொறிமுறை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூறினர். அவற்றையும் நிபந்தனையாக கூட்டமைப்பு விதித்தது.

இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் தீர்மானத்தில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அதைச் செயற்படுத்த மாட்டேன் என்று கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாகத் தெரிவித்திருந்தமை தெரிந்ததே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *