மைத்திரியின் ‘சுடலை ஞானம்’

நாடாளுமன்றத்தைக் கலைப்பது சம்பந்தமாகத் தாம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் விடயத்தில் உயர்நீதிமன்றம் எந்தத் தீர்ப்பை – முடிவை வழங்கினாலும் அதனை கெளரவத்தோடு தாம் ஏற்றுக் கொள்வார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கின்றார்.

“அரசமைப்பு வியாக்கியானம் தொடர்பாக உயர்நீதிமன் றத்தின் விளக்கத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். அந்த முடிவு எத்தகையதாக இருந்தாலும், எதிர்கால அரசியல் தீர்மானங்களை அதற்கு அமைவாக, எமது தாய்நாட்டின் நலனுக்காகவும், தனிப்பட்ட எந்த மனிதருக்கோ, அணிக்கோ, கட்சிக்கோ சாதகமாக அல்லாத விதத்திலும் முன்னெடுப்பேன்” என்று தமது ‘ருவிட்டர்’ பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

அவரது இந்தத் தீர்மானம் – முடிவு ‘சுடலை ஞானம்’ போலவே பிறந்திருப்பதாகத் தோன்றுகின்றது. ‘கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்’ செய்வது போல, ‘குதிரை ஓடிய பின்னர் லயத்தை மூடுவது’ போல, இப்போது தத்துவம் பேசு கின்றார் அவர்.

கடந்த ஐந்து வாரங்களுக்கு மேலாக அவர் அதிரடியாக எடுத்த அரசியல் தீர்மானங்கள் எல்லாம் தனி மனிதர்களுக்கும், தனி அணிகளுக்கும், தனிக் கட்சிக்கும் எதிரானவை என்பது வெளிப்படையானது; அதுபோலவே பிற தனி மனிதருக்கும், தான் சார்ந்த குழுவினருக்கும், தனது தரப்புக் கட்சியினருக்கும் சார்பாக – பக்கச் சார்பாக – ஓரவஞ்சனையாக எடுத்த முடிவுகள் என்பதும் தெட்டத் தெளிவானது. அவரது இந்த முடிவுகள், தீர்மானங்கள், நாட்டின் முதல் தலைமகனான நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் மனநிலை குறித்துப் பலரும் பலவிதமாகப் பகிரங்கமாக விமர்சிக்கும் நிலையை ஏற்படுத்தின. அவரது அரசியல் வரிகள் நாடாளுமன்றத்திலேயே அவரது மனநிலைச் சிந்தனைப் போக்குக் குறித்து கடும் விமர்சனத்தை முன்வைத்தனர்.

அமெரிக்காவில் நாட்டின் ஜனாதிபதியும் படைத்தளபதிகளும் வருடம் தோறும் மனநிலைப் பரிசோதனைக்கு உள்ளாகின்றமை போல இலங்கையிலும் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும், அதற்கான சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றெல்லாம் இதே ஜனாதிபதியினால் இராணுவத்தின் ஐந்து நட்சத்திர தரத்தில் பீல்ட் மார்ஷலாக நியமிக்கப்பட்டவரே கூறும் அளவுக்கு நிலைமை சென்றது. அரசியல் தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்புகள், முடிவுகள் நாட்டு மக்கள் மத்தியில் அவர் குறித்து சில சந்தேகங்களை ஏற்படுத்துவனவாக இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த நிலைமையின் உச்சக்கட்டமாக ஒரு பெண்மணி ஜனாதிபதியின் மனநிலை தொடர்பான விடயத்தை ஒட்டி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆணையீட்டு எழுத்தாணை மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநிலை குறித்து ஆராய்வதற்காக மனநோய் தொடர்பான சட்டங்களுக்கு அமைவாக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ஊடான விசாரணைகளை ஆரம்பிக்கும்படி பொலிஸ்மா அதிபருக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும் என இந்த மனுவில் கோரப்பட்டிருக்கின்றது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையானோரின் நம்பிக்கையைப் பெறுபவரைப் பிரதமராக நியமிக்க வேண்டும் என்பது அரசமைப்புச் சட்டம். அதுவே உலக நாடுகளில் எல்லாம் ஜனநாயக மரபு. அதுவே ஜனநாயகத்தின் அடிப்படை விடயமாக நாட்டின் ஜனாதிபதியிடமிருந்தும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், நாடாளுமன்றத்தின் 225 எம்.பிக்களும் ஒன்று பட்டுக் கோரினால் கூட ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் நாட்டின் ஜனாதிபதி அறிவிப்பராயின், அவரையும் அங்கொடையையும் தொடர்படுத்தி நாடாளுமன்றத்தில் பேசப்படுகின்றமை தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.

* நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றிருக்கும் பிரதமரைத் திடீரென பதவி நீக்கும் விதத்தில் வர்த்தமானி அறிவித்தலை விடுத்தமை –
* நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறாதவரை பிரதமராக நியமித்தமை –
* பெரும்பான்மை பெறமுடியாதவர் என்று தெரிந்தும் அவர் தொடர்ந்து பிரதமராக இருப்பதற்கு வசதி வாய்ப்பு, வழி ஏற்படுத்திக் கொடுத்துப் பார்த்திருந்தமை –
* அந்த அரசைத் தொடர முடியாது என்ற யதார்த்தம் – கட்டாயம் – தலைக்கு மேல் அரசியல் விவகாரமாகச் சென்றபோது, தனக்கு இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத்தேர்தலுக்கு உத்தரவிட்டமை –
* இந்த விடயங்களை ஒட்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காழ்ப்புணர்வோடு வெளியிட்ட அறிவிப்புகள்

இப்படி அண்மைக்காலமாக ஜனாதிபதி தரப்பில் இருந்து வெளியான எதிர்வினைகள் அவரின் நிலைமை, ஆளுமை, திறமை ஆகியன தொடர்பில் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பது மறுக்கப்பட முடியாதது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒரு மேசையில் அமர்ந்து முதல் நாள் அப்பம் சாப்பிட்டு விட்டு அடுத்த நாள் எதிரணியுடன் இணைந்து மஹிந்த ராஜபக்ஷவுக்கே புறமுதுகில் குத்தியவர் – ஒன்றுமில்லாத நபரை அவர் கற்பனையே பண்ணிப் பார்க்க முடியாத நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவிக்கு உயர்த்திவிட்ட ரணிலை மூன்றரை வருடங்கள் பதவியை அனுபவித்துவிட்டு, அந்த ரணிலின் முதுகில் குத்தியபடி, அதே மஹிந்த ராஜபக்ஷவுடன் சேர்ந்து அரசியல் வியாக்கியானங்கள், விளக்கங்கள் பேசினால் மக்கள் மத்தியில் அவர்கள் மனதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்து இத்தகைய படிமானம் வருவது தவிர்க்க முடியாததுதான்.

– நன்றி: ‘காலைக்கதிர்’ ஆசிரியர் தலையங்கம் (11.12.2018)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *