அக்கரைப்பற்றை அழிக்கின்றார் மேயர்! – தவம் பகிரங்க குற்றச்சாட்டு

“கம்பெரலிய திட்டத்தின் கீழ் நாங்கள் கொண்டு வந்த வேலைகளை செய்ய விடாமல் அக்கரைப்பற்று மேயர் தடுத்துள்ளார். அக்கரைப்பற்றை இவர் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டிருக்கின்றார்.”

– இவ்வாறு அக்கரைப்பற்றில் நடைபெற்ற சமகால அரசியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேலைவாய்புச் செயளாளருமான ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“முன்னாள் அமைச்சரும் அவரது மகனினாலும் இந்த வருடம் மட்டும் அக்கரைப்பற்றின் 150 மில்லியன்ம் (15 கோடி) ரூபா அபிவிருத்தி தடுக்கப்பட்டுள்ளது.

கம்பெரலிய திட்டத்தின் கீழ் நாங்கள் கொண்டு வந்த வேலைகளை செய்ய விடாமல் அக்கரைப்பற்று மேயர் தடுத்துள்ளார். அக்கரைப்பற்றை இவர் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டிருக்கின்றார். எல்லா ஊர்களிலும் கம்பெரலிய வேலைத்திட்டம் நடக்கின்ற போதும், அக்கரைப்பற்றில் மற்றவர்கள் வேலை செய்தால் தனதும் தனது தந்தையினதும் எதிர்காலம் அழிந்து போகும் என்பதால் அனைத்து அபிவிருத்தி வேலைகளையும் குறித்த மேயர் தடுத்துள்ளார்.

கடந்த 9 மாதங்களில் எந்தவித நிதிகளையும் கொண்டுவந்து ஊரின் எதுவிதமான அபிவிருத்திகளையும் செய்யாத இவர்கள் மாறாக அபிவிருத்தித் திட்டங்களைக் கொண்டு வருபவர்களையும் செய்ய விடுவதில்லை. இது மட்டுமல்ல எமது நகர திட்டமிடல் அமைச்சின் கீழ் கிடைத்த 75 மில்லியன் ரூபா பெறுமதியான வீதி அபிவிருத்தி மற்றும் சந்தை நிர்மானத்திற்கான 50 மில்லியன் ரூபா, கடற்கரை குடும்பப் பூங்காவுக்கான 08 மில்லியன் ரூபா என்பவற்றுக்கான மதிப்பீட்டறிக்கையை தாமதப்படுத்தியும் வீணான தர்க்கம் புரிந்தும் தடுத்துள்ளனர். அதேபோன்று சமூக நல்லிணக்க அமைச்சினூடாக இந்த வருடம் மட்டுமே எம்மால் கொண்டுவரப்பட்ட சுமார் 150 மில்லியன் (15 கோடி) ரூபா பெறுமதியான அக்கரைப்பற்றுக்கான அபிவிருத்தியை தடுத்துள்ளனர்.

கடந்த மாநகர சபைத் தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகளைக் கொண்டு ஆட்சிப்பீடமேறியவர்கள் இன்று அதே மக்களுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் கொண்டு வரும் அபிவிருத்தியைக் கூட தன் சுயநலம் பார்த்து தடுக்கின்றனர். எந்தக் கட்சியாயினும் ஊருக்கான அபிவிருத்தி என்று நினைத்தால் அனுமதி வழங்கியிருப்பார்கள். எனவே, நாங்கள் ஊர் என்ற வகையில் இன்னும் பல நிதிகளைக் கொண்டுவந்து பல அபிவிருத்தித்திட்டங்களைக் செய்யவிருக்கின்றோம்” – என்றார்.

இந்த நிகழ்வில் கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊரின் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *