தமிழ் பேசும் மக்களுக்காக புது அரசியல் கூட்டணி! – ஹக்கீம், சம்பந்தன் அடுத்தவாரம் பேச்சு

சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்தில் ஆரம்பிப்பதற்கு தமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழுக் கூட்டம், செயற்குழு செயலாளரும் வடமேல் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான ரிஸ்வி ஜவஹர்ஷாவின் ஏற்பாட்டில் நேற்று (09) குருநாகலில் அமைந்துள்ள வடமேல் மாகாணசபையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு முடிவுரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது:-
“அரசியல் நெருக்கடி நிலவுகின்ற இக்காலகட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகள் ஜனநாயகத்தை விரும்புகின்ற மக்கள் மத்தியில் நற்பெயரை சம்பாதித்துள்ளது. அதேவேளை, எமது கட்சியின் அரசியல் நகர்வுகள் குறித்து சிலர் வைத்திருக்கின்ற தப்பபிப்பிராயங்களையும் அது போக்கியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணித்ததன் மூலம் எதனை சாதித்தோம் என்று பலரும் கேட்கின்றனர். முஸ்லிம்களின் பல பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்பதில் நாங்கள் உடன்படுகிறோம். ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிப்பதாக இருந்தால், இவற்றுக்கு தீர்வுகாணும் நோக்கில் சரியான திட்ட வரைபுடன் தேர்தலை அணுகவேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் எங்களுக்கு நிரந்தர உறவு என்பது ஒருபோதும் இருந்தது கிடையாது. அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர பகைவர்களும் இல்லை என்பதை வைத்து எல்லா கட்சிகளும் அரசியல் செய்கின்றன. எங்களது அரசியலை சிங்கள கட்சிகள் மற்றும் தமிழ் கட்சிகளுடன் சமாந்தரமாக பகிர்ந்துகொள்ளவேண்டிய பொறுப்பில் முஸ்லிம் காங்கிரஸ் இருந்துகொண்டிருக்கிறது.
தேசிய கட்சிகளுடன் நாங்கள் உறவு கொண்டாடுகின்றபோது, தமிழ் கட்சிகளுடனான எங்களது உறவில் அடிக்கடி விரிசல்கள் ஏற்படுகின்றன. நாங்கள் எவ்வளவுதான் நெருக்கமாக நடந்தாலும், பிரச்சினைகளுக்கு தீர்வு விடயத்தில் தமிழ் தரப்புடன் முரண்பாடுகள் ஏற்படுவது சர்வசாதாரணமாக நடந்துவருகின்றன.
எதிர்வரும் காலங்களில் தேர்தல்களுக்கு முன்னர் இல்லாவிடினும் தேர்தல்களின் பின்னராவது, மலையக கட்சிகள் உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படமுடியுமா என்பது பற்றி நாங்கள் சிந்திக்கின்ற காலம் வந்துள்ளது.
முஸ்லிம்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளில் நிர்வாக ரீதியில் விடை தேடவேண்டிய நூற்றுக்கணக்கான பிரச்சினைகள் இருக்கின்றன. இவ்விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துநின்று, என்ன நிபந்தனைகள் விதித்தாலும் தமிழர் தரப்புடன் பேசாமல் நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என்ற யதார்த்தையும் நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அரசியல் பிரச்சினை, நிர்வாகப் பிரச்சினை, இனப்பிரச்சினை போன்றவற்றுக்கு தீர்வு காண்கின்றபோது அவை யதார்த்தமாக இருக்கவேண்டுமானால் அது ஒரு புறத்திலிருந்து மாத்திரம் பெறக்கூடிய தீர்வகாக இருக்கமுடியாது. பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் விடயத்தில், கூட்டு வைத்திருக்கும் தேசியக் கட்சியுடன் உடன்பாட்டுக்கு வருகின்ற அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தேவையேற்படின் மலையக கட்சிகளுடனும் சமாந்தரமாக பேசவேண்டும்.
தமிழ் – முஸ்லிம் மக்களிடையே ஏராளமான பிரச்சினைகள் தீர்வுகாணப்படாமல் இருக்கின்றன. இவற்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரம் தீர்வை தந்துவிடும் என்ற இறுமாப்பில் எதனையும் செய்துவிட முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் தேர்தலுக்கு செல்வதற்குமுன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என எமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரமே ஆரம்பிக்கப்படவுள்ளன.
சிறுபான்மை மக்கள் அச்சப்படுகின்ற ஆட்சியாளர்களை விரட்டுவதற்கு, நாடுதழுவிய தேர்தலில் சாதிக்க வேண்டுமாயின் சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் ஒருமித்து பயணிக்க வேண்டும். எங்களது நீண்டகால பிரச்சினைகளை பிச்சைக்காரன் புண்போல வைத்துக்கொண்டு, தேர்தல் மேடைகளில் மாத்திரம் அவற்றை முழங்கிவிட்டுப் போகின்ற கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்கமுடியாது.
கடந்த இரு ஜனாதிபதி தேர்தல்களின்போது, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஆட்கள் இல்லாமல் வெளியிலிருந்து இருவரை இறக்குமதி செய்திருக்கின்றோம். அடுத்த தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் சில மாற்றங்களைச் செய்யாவிட்டால், நாங்கள் சேர்ந்து போட்டியிடமாட்டோம் என்று தைரியமாக சொல்லியிருக்கிறேன். நாங்கள் சார்ந்திருக்கும் இயக்கம் வெல்லவேண்டுமாக இருந்தால், களத்திலிருக்கின்ற யதார்த்தங்களை புரிந்துகொள்ள வேண்டும்.
நான் ஐக்கிய தேசியக் கட்சி மேடைகளில் காரசாரமாகப் பேசிவருவதால், அந்தக் கட்சியிலேயே சங்கமித்துவிடுவேனோ என்ற அச்சம் சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம். அப்படியான அச்சம் யாருக்கும் வரத்தேவையில்லை. முஸ்லிம் காங்கிரஸ் என்றும் முஸ்லிம் காங்கிரஸ்தான். எமது கட்சி தனது நல்லெண்ண சமிக்ஞைகளை அவர்களுக்கு வெளிக்காட்டியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் எந்தக் கட்சிகளிடமும் சோரம்போகாது. ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில்தான் எமது கட்சியின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாங்கள் முட்டுக்கொடுக்கப்போய் மூன்று தடவைகள் கட்சி பிளவுகளை சந்தித்துள்ளது. இந்தமுறைதான் அப்படியான கண்டத்திலிந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேரும் தப்பினோம்.
நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணியில் யானைச் சின்னத்தில் வெறுமனே பயணிக்கமுடியாது. தேர்தல்களின்போது எங்களுக்கென தனியாதொரு யாப்பை கேட்டிருக்கிறோம். அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால், யார் ஆட்சிக் கதிரையில் அமர்வது என்ற தெளிவு இருக்கவேண்டும். யதார்த்தை உணர்ந்து புரட்சிகரமான மாற்றங்களை விரும்பும் சக்திகளோடு பயணிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் என்றும் தயாராக இருக்கிறது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *