நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் ஐ.தே.க. மூன்றாக உடையும்! ‘சாமி’ கதைகூறி சாபமிடுகிறார் நிமல்!!

” நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு விரைவில் வெளிவரவேண்டும். அப்போதுதான் அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணமுடியும்.” என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவர் நிமல்சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

‘ கடவுளுக்கு எம்மால் கட்டளையிடமுடியாது. வரம் தருமாறு பிரார்த்தனை மட்டுமே செய்யமுடியும். இவ்வாறுதான் உயர்நீதிமன்ற தீர்ப்பை உடன் வழங்குமாறு நீதியரசர்களுக்கு எம்மால் அழுத்தம் கொடுக்கமுடியாது. ஆனால், துரிதப்படுத்துமாறு கோரிக்கை முன்வைக்கலாம். அந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தால்தான் ‘அடுத்தக்கட்ட நகர்வு’ சம்பந்தமாக தீர்மானமொன்றை எடுக்கமுடியும்.

அதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் ஐக்கிய தேசியக்கட்சி பலமடைந்துவிட்டது என சிலர் பகல்கனவு காண்கின்றனர். நிலைமை அவ்வாறு அல்ல. உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியானபிறகு ஐக்கியதேசியக் கட்சி மூன்று அணிகளாக பிளவுபடும். அதன்பின்னர் எமது அணி வெற்றிநடைபோடும்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும். நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதே அனைத்துப் பிரச்சினைகளுக்குமான சிறந்த தீர்வாக அமையும்” என்றார்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *