இளைஞரின் உயிரைக் காவுகொண்ட இரணைமடுக்குளம்!

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் வான்பகுதிக்குள் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த 21 வயதுடைய என். டிலக்சன் எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 4.30 மணியளவில் இரணைமடுவின் வான் கதவு நான்கு திறக்கப்பட்டிருந்து. இதில் இடது பக்கம் இரண்டு கதவுகளும், வலது பக்கம் இரண்டு கதவுகளும் திறக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதிக்குள் பெருமளவான பொதுமக்கள் குழுமியிருந்தனர்.

இதில் சில இளைஞர்கள் குறித்த பகுதியின் ஆழமான பகுதிக்குள் இறங்கி குளித்துக் கொடிண்டிருந்தனர்.

இதன்போது யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி பகுதியிலிருந்து ஐந்து பேருடன் இரணைமடுவை பார்க்க வந்திருந்த இளைஞர் ஒருவர் குளிப்பதற்கு இறங்கியபோது நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தார்.

இந்த நிலையில் அவருடன் வருகை தந்த நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர் உடனடியாக கிளிநொச்சி பிரதி பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி படைகளின் தலைமையகம் போன்றோருக்கு உடனடியாக அறிவித்தபோதும் முப்பது நிமிடங்களுக்கு பின்னரே பொலிஸ் மற்றும் படையினர் வருகை தந்தனர்.

இதற்கிடையில் ஒரு பகுதியில் திறக்கப்பட்டிருந்த வான்கதவுகள் மூடப்பட்டு சில இளைஞர்கள் நீரில் இறங்கி தேடுதலை மேற்கொண்டு ஒரு மணித்தியாலயத்திற்கு பின்னர் சடலத்தை மீட்டுள்ளனர்.

இதேவேளை, இரணைமடு குளத்தின் வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டுக் கொண்டிருந்த சிறுமி தவறி நீருக்குள் வீழ்ந்த நிலையில் காப்பாற்றப்பட்டு மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரணைமடு குளத்தை பார்வையிடுவதற்கு நேற்று ஏராளமான பொது மக்கள் கூடியிருந்தனர் அவர்களுடன் சிறுவர்களும் வருகை தந்திருந்தனர்.

இதன்போது சிலர் தங்களது பிள்ளைகளுடன் ஆபத்தான பகுதியான வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டனர்.

இந்தநிலையில் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞரின் சடலம் மீட்கப்பட்டு பரப்பாக இருந்த சந்தர்ப்பத்தில் மறுபுறம் சிறுமி நீருக்குள் வீழ்ந்து தத்தளித்த கொண்டிருந்த போது நபர் ஒருவரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இரணைமடு குளத்தை பார்வையிடுவதற்கு வருகை தருபவர்கள் தங்களது குழந்தைகளை மிகவும் கவனமாக வைத்திருக்க வேண்டும் எனவும், ஆபத்தான பகுதிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களுக்குள் குழந்தைகளுடன் செல்ல வேண்டாம் எனவும், அத்தோடு சிறுவர்களை தனியே இரணைமடுவுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரணைமடுக் குளம் அபிவிருத்திக்கு பின் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *