உலக புகழ்பெற்ற பிரமிடு மீது ஏறி நிர்வாண படம் எடுத்த தம்பதி!

எகிப்தில் உலக புகழ்பெற்ற பிரமிடு மீது ஏறி நிர்வாண படம் எடுத்த தம்பதியின் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

எகிப்து நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பிரமிடுகள் இன்றைக்கும் சுற்றுலாப்பயணிகளை, வரலாற்று ஆய்வாளர்களை கவர்வதாக அமைந்துள்ளன.

அங்கு, உலகின் ஏழு பழைய அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிற கிசாவின் கூபு பிரமிடு உள்ளது. புகழ் பெற்ற அந்த பிரமிடின் உச்சிக்கு இரவு நேரத்தில் ஒரு வெளிநாட்டு தம்பதி சென்று, நிர்வாணமாக கட்டித்தழுவி உள்ளனர்.

இது பற்றிய 3 நிமிட வீடியோ காட்சி, யு டியுப்பில் வெளியாகி எகிப்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அந்த நாட்டின் அரசு தலைமை வக்கீலுக்கு தொல்பொருள் துறை மந்திரி காலித் அல் அனானி உத்தரவிட்டுள்ளார்.

இதுபற்றி எகிப்து தொல்பொருள் துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “ வெளிநாட்டினர் 2 பேர் பிரமிடு உச்சியில் இரவு நேரத்தில் ஏறி, நிர்வாணப்படம் எடுத்து, அதை சுழற்சியில் விட்டிருப்பது பொது ஒழுக்கத்தை மீறுவதாக அமைந்துள்ளது. இதில் உண்மையை கண்டறியவும், தேவையான நடவடிக்கை எடுக்கவும் தொல்பொருள்துறை மந்திரி காலித் அல் அனானி முடிவு செய்துள்ளார். இதுபற்றி அரசு தலைமை வக்கீல் விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *