ஐ.தே.கவின் 14 உறுப்பினர்கள் மைத்திரி அணிக்கு கைகொடுப்பு! ஊவாவில் நிறைவேறியது பட்ஜட்!!

2019 ஆம் நிதியாண்டுக்கான ஊவா மாகாண சபையின்  வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை ஐக்கிய தேசியக்கட்சியின் அமோக ஆதரவுடன் 28 அதிகப்படியான வாக்குகளினால் நேற்று நிறைவேற்றப்பட்டது.

ஊவா மாகாண சபையின்   (2019) வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை குறித்து கடந்த மூன்று தினங்களாக வாத விவாதங்கள் நடைபெற்று, நேற்று (07) இரவு 8 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மாகாண சபை மண்டபத்தில்  சபைத் தலைவர் ஏ.எம். புத்ததாச தலைமையில் நடைபெற்ற  வாக்கெடுப்பில், சபையின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் 14 பேரின் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இவ் வாக்கெடுப்பு இடம்பெறும் முதன்பே, சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.எம்.ரட்னாயக்க (ஐ.தே.க.) சபை அமர்வில் எழும்பி, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சபையின் அடுத்தாண்டிற்கான வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கைக்கு ஆதரவு தர தீர்மானம் எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

சபைத்தலைவர் ஏ.எம்.புத்ததாச வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கைக்கு வாக்கெடுப்பு நடாத்தப்படல் வேண்டுமென்று கூறி, வாக்கெடுப்பிற்கு உத்தரவிட்டார். இவ் வாக்கெடுப்பில் வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கைக்கு ஆளும் கட்சியினர் 16 பேருடன், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 14 பேருமாக 30 பேர் ஆதரவாக வாக்களித்தனர். சபையின் ஜே.வி.பி. உறுப்பினர்கள் இருவர் மட்டும் வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கைக்கு எதிராக வாக்களித்தனர். இதன் பிரகாரம் 28 அதிகப்படியான வாக்குகளினால், வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை நிறைவேற்றப்பட்டது.

சபைத் தலைவருடன் 34 பேரைக் கொண்ட இம் மாகாண சபையின் ஜானக்க திஸ்ஸ குட்டியாராய்ச்சி என்ற எதிர்க்கட்சி உறுப்பினர் மட்டும், அன்றைய தினம் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை. அவர் விடுமுறையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டின்கீழேயே ஊவாமாகாணசபை இயங்குகின்றது.  மத்திய அரசியல், ஐக்கிய தேசியக்கட்சிக்கு, ஜனாதிபதி துரோகமிழைத்துள்ளார் எனக் கூறப்படும் நிலையில் அக்கட்சிக்கு, ஐ.தே.க. உறுப்பினர்கள் ஆதரவளித்தமை குறித்து பலகோணங்களில் பேசப்படுகின்றது.

(பதுளை நிருபர்)

செல்வராஜா

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *