மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வின்போது பேரதிர்ச்சி! – இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு மீட்பு

மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் பணியின்போது, இரும்புக் கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இதுவரையில் மன்னார் புதைகுழியில் இருந்து 266 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் பல எலும்புக்கூடுகள் அங்கு புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் தொடர்ந்தும் தோண்டும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையிலேயே நேற்றைய அகழ்வுப் பணியின்போது மீட்கப்பட்ட எலும்புக்கூடு ஒன்றின் இரண்டு கால்களும், இரும்புக்கம்பியுடன் பிணைத்துக் கட்டப்பட்டிருந்தன.

இது அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான பல ஊகங்களை உண்மையாக்கும் வகையில் இந்த மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.

இதுவரை நாட்களும் மனித புதைகுழி தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்ட போதும் குறித்த மனிதப் புதைகுழியில் காணப்படும் மனித எலும்புக்கூடுகள் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளாக இருக்கலாம் என காணமல்போன உறவுகளின் பெற்றோர் அச்சம் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், நேற்று கண்டுபிடிக்கப்பட்ட இரும்புக் கம்பியால் கால்கள் கட்டப்பட்ட மனித என்னும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த வாரத்தில் குறித்த மனிதப் புதைகுழியில் இருந்து பெண் ஒருவரின் மோதிரம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தொடர்சியாக சந்தேகத்துக்கு இடமான மனித எச்சங்கள் மற்றும் தடயப் பொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *