அரசியல் நெருக்கடிகளினால் இலங்கையைப் புறக்கணிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்! – இரத்தாகின்றன முன்பதிவுகள்

இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளை அடுத்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் வணிக முயற்சியாளர்களின் வருகைகள் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் அண்மைய அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், 20 வீதமான அறை முன்பதிவுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று கொழும்பில் 200 அறைகளைக் கொண்ட, கோல்பேஸ் விடுதியின் முகாமையாளர் சந்திர மகோற்றி தெரிவித்துள்ளார்.

“வழக்கமாக எமது விடுதி நிரம்பியிருக்கும். முன்பதிவு ஒதுக்கீடு பயன்படுத்தப்படாது என்ற அச்சத்தால் நாங்கள் தள்ளுபடிகளை வழங்குகின்றோம்” என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, “பல்வேறு விமானங்களின் முன்பதிவுகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஐரோப்பாவில் இருந்தான பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன” என்று ஸ்ரீலங்கன் விமானசேவை வட்டாரம் ஒன்று தெரிவித்தது.

இலங்கையின் அரசியல் குழப்பங்களை அடுத்து, இங்கு நடத்தவிருந்த கூட்டங்கள், நிகழ்வுகளை பல்வேறு நிறுவனங்களும் தென்கிழக்காசியாவுக்கு நகர்த்த ஆரம்பித்துள்ளன.

இதுகுறித்து, கருத்து வெளியிட்ட இலங்கை விடுதிகள் சங்கத்தின் தலைவர் சனத் உக்வத்த,“ சிலர் இரத்துச் செய்திருக்கிறார்கள். சிலர் சிங்கப்பூர், இந்தோனேசியாவுக்கு மாற்றியிருக்கிறார்கள். கருத்தரங்குகள், கண்காட்சிகள் தொடர்பான முன்பதிவுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.

அதேவேளை, இலங்கை சுற்றுலா ஒழுங்கமைப்பு சங்கத்தின் தலைவர், ஹிரத் பெரேரா கருத்து வெளியிடுகையில், “இந்த நேரத்தில் முன்பதிவு மெதுவாகி விட்டது, இது கவலை தருகின்றது. தற்போதைய நெருக்கடி இழுத்தடிக்கப்படும்போது,அதன் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் மட்டுமன்றி, எல்லா இடங்களைச் சேர்ந்தவர்களும் இரத்துச் செய்கின்றார்கள்” என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *