ஜனாதிபதி இழுத்தடிப்பு செய்தால் நாட்டுக்கு பேராபத்து – ஐ.தே.க. எச்சரிக்கை!

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிடம் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலம் இருப்பதால் அரசியல் குரோதத்தைக் கைவிடுத்து அரசமைப்பின் பிரகாரம் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க ஜனாதிபதி முன்வரவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், மேல்மாகாணசபை உறுப்பினருமான சி.வை.பி. ராம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரசியல் சூழ்ச்சிமூலம் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இனியும் இழுத்தடிப்பு செய்வார்களாயின் அது நாட்டுக்கே சாபக்கேடாக அமையும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதுதொடர்பாக சி.வை.பி.ராம் மேலும் கூறியவை வருமாறு,
“ இலங்கையில் கடந்த 26 ஆம் திகதி முதல் அரசியல் குழப்பம் நீடித்துவருகின்றது. நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவறாகப் பயன்படுத்தியதே இதற்கெல்லாம் மூலக்காரணமாகும். இன்று நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. சுற்றுலாத்துறை உட்பட முக்கிய துறைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. அரசியல் குழப்பத்தால் வெளிப்படையாக தெரியாவிட்டாலும் பலகோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றை ஈடுசெய்வதற்கு பல ஆண்டுகள் எடுக்கும்.
அரசமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தில் 113பேர் ஆதரவைபெற்ற கட்சியே ஆட்சியமைக்கவேண்டும். பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு நேசக்கரம் நீட்டியுள்ளதால். இதன்மூலம் பெரும்பான்மை உறுதியாகிவிட்டது. ஆகவே, தனிப்பட்ட காரணங்களையெல்லாம் மறந்து, நாட்டின் நலனைக்கருதி – அரசமைப்பின் பிரகாரம்செயற்பட ஜனாதிபதி முன்வரவேண்டும்.
அரசமைப்பின் பிரகாரமோ அல்லது மக்களின் வாக்குரிமைமூலமே ஆட்சிமாற்றம் ஏற்பட்டிருந்தால் எமது கட்சி கௌரவமாக வெளியேறியிருக்கும். சூழ்ச்சிக்கு எதிராகவும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவுமே போராடினோம். அப்போராட்டத்தில் வெற்றி என்ற கட்டத்தையும் நெருங்கிவிட்டோம்’’ என்றார் ராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *