தமிழருக்கு ரணில் எதிரியாக இருக்கலாம்; மைத்திரி மறக்கமுடியாத பச்சைத்துரோகி! – சஜித் தெரிவிப்பு

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, வதந்திக் கருத்துக்களால் தமிழ் மக்களுக்கு எதிரியாக இருக்கலாம். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்கள் மனங்களில் மறக்க முடியாத பச்சைத்துரோகி ஆவார்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அலரிமாளிகையில் வைத்து வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றின் இலங்கைச் செய்தியாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2004ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் அதன் பிரதித் தலைவராக இருந்த கருணா அம்மானுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் – பிளவுகளுடன் அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவைத் தொடர்படுத்தி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெளிவந்த கதை வெறும் வதந்தியாகும். கருணா அம்மானை ஐ.தே.க. காப்பாற்றி வைத்திருக்கவில்லை. அவருக்குப் பாதுகாப்பு, பிரதி அமைச்சுப் பதவி, சுகபோக வாழ்க்கை ஆகியவற்றை மஹிந்த ராஜபக்ஷ அரசே வழங்கியிருந்தது. இது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

மஹிந்த ராஜபக்ஷவின் கொடுங்கோல் ஆட்சியில் கருணா அம்மானின் அட்டூழியம் கிழக்கில் தலைவிரித்தாடியது. இதற்கு மஹிந்த அரசு முழு ஆதரவையும் வழங்கியிருந்தது.

இப்படிப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ தரப்புடன்தான் தமிழ் மக்களின் பெரும்பாலான வாக்குகளினால் ஜனாதிபதியாகத் தெரிவான மைத்திரிபால சிறிசேன இணைந்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அமோக வாக்குகள் மைத்திரிபாலவுக்குக் கிடைத்தன. அதை அவர் உணர்ந்தும் உணராமல் தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றார்.

2004ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் விடுதலைப்புலிகளின் அமைப்பிலிருந்து கருணா அம்மான் விலகினார். இந்த விவகாரத்தையடுத்து வெளிவந்த கட்டுக்கதையால் ரணில் விக்கிரமசிங்க மீது தமிழ் மக்கள் சிலர் அதிருப்தியில் இருக்கலாம். ஏன் ரணிலை எதிரியாகக்கூட அவர்கள் பார்க்கலாம். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்கள் மனங்களில் மறக்க முடியாத பச்சைத் துரோகி ஆவார்.

1993ஆம் ஆண்டு மே தினத்தன்று கொழும்பு நகரில் விடுதலைப்புலிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த எனது தந்தை ரணசிங்க பிரேமதாஸ உயிரிழந்தார். அதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பை ஆதரித்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை நான் வெறுக்கவில்லை. போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட அவர்களை எனது சகோதரர்களாகவே நான் பார்க்கின்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறியதும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கியே தீரும். அந்தத் தீர்வு இலங்கையிலுள்ள சகல இனத்தவர்களும் ஏற்கும் தீர்வாக இருக்கும்” – என்றார்.
………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *